
உத்தரப் பிரதேச மாநிலம், மொராதாபாத் நகரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) கிளையில், பொதுமக்களுக்குப் பயன்படும் என்பதால் தனது கணக்கில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான ரூ.100, ரூ.50, ரூ.10 நோட்டுகளை வணிகர் ஒருவர் செலுத்தி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்த்துள்ளார்.
மொராதாபாத் நகரைச் சேர்ந்த வணிகர் அவ்தேஷ் குமார் குப்தா. இவர் புத்தி பிகார் பகுதியில் உள்ள எஸ்பிஐ கிளையில் வைத்துள்ள தனது கணக்கில் குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை வெள்ளிக்கிழமை செலுத்தினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுகளுக்குத் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வங்கி ஏடிஎம் மையங்கள் முன்பு முதியவர்கள் நிற்பதை பார்த்தபோது மிகுந்த வேதனை அடைந்தேன்.
எனவே, என்னிடம் இருந்த ரூ.1.5 லட்சம் மதிப்பிலான குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை எனது வங்கிக் கணக்கில் செலுத்தியிருக்கிறேன்.
இந்தப் பணம் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்குப் பயன்படும். இதேபோல் மற்றவர்களும் தங்களிடம் உள்ள குறைந்த மதிப்புடைய பணத்தை தங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தி உதவலாம் என்றார் அவ்தேஷ் குமார் குப்தா.