Enable Javscript for better performance
கர்நாடகத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைய ஆதரவு தாருங்கள்: அமித் ஷா- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடகத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைய ஆதரவு தாருங்கள்: அமித் ஷா

    By DIN  |   Published on : 28th November 2016 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    bjp

    பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக பிற்படுத்தப்பட்டோர் மாநில மாநாட்டில் தொண்டர்களை நோக்கி கையசைக்கிறார் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா. உடன், மத்திய அமைச்சர்கள் அனந்த்குமார், சதானந்த கெளடா,

    கர்நாடகத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைய ஆதரவு தாருங்கள் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்தார்.
    பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பா.ஜ.க. பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில மாநாட்டை தொடக்கி வைத்து அவர் பேசியது:
    நாட்டின் வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக இருக்கும் கருப்புப் பணத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிப்பதற்காக நமது பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நடவடிக்கைதான் 500, 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாததாக அறிவித்தது.
    இந்த நடவடிக்கையை மக்கள் பாராட்டுகிறார்கள். ஆனால், கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் கொள்ளையர்கள் பிரதமர் மோடியை வசைபாடுகின்றனர். அறிவிப்பு முன்பு வரை வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை திரும்பக் கொண்டுவர எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடியை நோக்கி கேள்வி எழுப்பி வந்தார்கள்.
    ஆனால், பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது முதல் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் தூக்கத்தை இழந்து தவித்து வருவதோடு, தங்கள் முகத்தின் பொலிவையும் இழந்து நிற்கிறார்கள்.
    இந்தத் தலைவர்கள் எல்லாம் கருப்புப் பணத்தை இழந்த தவிப்பில் பிரதமர் மோடியை கடுமையாகத் தாக்கிப் பேசி வருகிறார்கள். ஊழலையும் கருப்புப் பணத்தையும் ஒழிக்க போர் தொடுத்திருக்கும் பிரதமர் மோடியை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டிருக்கிறார்கள். எனினும், பிரதமர் மோடியின் முயற்சிக்கு பிகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் ஆதரவு தெரிவித்துள்ளது ஆறுதலாக உள்ளது. இதற்காக நிதீஷ்குமாருக்கு நன்றி கூறுகிறேன்.
    கர்நாடகத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஊழல் படிந்த காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, நாட்டிலேயே அதிகமான ஊழல்கள் நிறைந்த அரசாக உள்ளது. காங்கிரஸின் ஊழல் ஆட்சியைத் தூக்கியெறிந்துவிட்டு, கர்நாடகத்தில் மீண்டும் பாஜகவின் நல்லாட்சியை உருவாக்க மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
    இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் அனந்த்குமார், சதானந்த கெüடா, சித்தேஸ்வர், பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai