Enable Javscript for better performance
பஞ்சாப் சிறை மீது தாக்குதல்: காலிஸ்தான் பயங்கரவாதி உள்பட 6 பேர் தப்பியோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பஞ்சாப் சிறை மீது தாக்குதல்: காலிஸ்தான் பயங்கரவாதி உள்பட 6 பேர் தப்பியோட்டம்

    By DIN  |   Published on : 28th November 2016 04:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    arrest

    சிறையிலிருந்து தப்பியோடிய காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்மீந்தர் மின்டூ. (வலது) உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட பர்மீந்தர், சிறைச்சாலை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்.

    பஞ்சாப் மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு நிறைந்த நபா மத்திய சிறைக்குள் போலீஸ் சீருடையில் ஆயுதங்களுடன் வந்த கும்பல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அதிரடியாகத் தாக்குதல் நடத்திவிட்டு, சிறைக்குள் புகுந்து "காலிஸ்தான் விடுதலை முன்னணி' பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹர்மீந்தர் மின்டூ உள்பட 6 குற்றவாளிகளை மீட்டுச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    இதையடுத்து, சிறைத் துறை டிஜிபி பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். சிறைக் கண்காணிப்பாளர், துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
    அதையடுத்து, காவல் துறை டிஜிபி சுரேஷ் அரோரா, சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
    போலீஸ் சீருடை அணிந்து வந்த அந்த இளைஞர் கும்பல், கைதி ஒருவரை சிறைச் சாலைக்கு அழைத்து வந்ததாக காவலர்களிடம் கூறினர். பின்னர், சிறைச் சாலை மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு உள்ளே புகுந்து, அங்கு அடைக்கப்பட்டிருந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்மீந்தர் மின்டூவையும், 5 குற்றவாளிகளையும் அவர்கள் மீட்டுச் சென்றனர். காவலர்களும் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். எனினும், அவர்களின் பதிலடி கடுமையானதாக இருக்கவில்லை. இதன் பின்னணியில் சதித் திட்டம் ஏதும் உள்ளதா? என கண்டறியப்படும் என்றார் அவர்.
    தப்பியவர்களில் ஹர்மீந்தர் மின்டூ மீது, "தேரா சச்சா செüதா' அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீமை தாக்கியது, ஹல்வாரா விமானப் படைத் தளத்தில் வெடிபொருள்களுடன் பிடிபட்டது உள்பட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவரை, பஞ்சாப் மாநில போலீஸார், தில்லி விமான நிலையத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு கைது செய்தனர்.
    பாதுகாப்பு அதிகரிப்பு: சிறையில் இருந்து கைதிகள் தப்பியதை அடுத்து, பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், வெளிமாநில பயணிகள் வந்து செல்லும் பேருந்து முனையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
    முதல்வர் அவசர ஆலோசனை: இந்தச் சம்பவம் தொடர்பாக, தலைமைச் செயலர் சர்வேஷ் கெüஷல் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் அவசர ஆலோசனை நடத்தினார்.
    மத்திய அரசு உத்தரவு: இதனிடையே, முதல்வர் பிரகாஷ் சிங் பாதலை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் தொடர்புகொண்டு, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து சிறைச் சாலைகளிலும் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
    அவரிடம், சிறைச் சாலை தாக்குதல் சம்பவம் குறித்தும், குற்றவாளிகளைப் பிடிப்பற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பிரகாஷ் சிங் பாதல் விவரித்தார்.
    அதைத் தொடர்ந்து, கைதிகள் தப்பியோடிய சம்பவம் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
    இதேபோல், சிறைச் சாலை தாக்குதல் சம்பவம் குறித்து அறிக்கை அளிக்குமாறு பஞ்சாப் மாநில காவல் துறை தலைவரை, மத்திய உள்துறைச் செயலர் ராஜீவ் மகரிஷி கேட்டுக் கொண்டார்.
    சிறைத் துறை டிஜிபி இடைநீக்கம்: இதனிடையே, சம்பவம் தொடர்பாக, துணை முதல்வரும், உள்துறை அமைச்சருமான சுக்பீர் சிங் பாதல் கூறியதாவது:
    கைதிகள் தப்பியோடியதை அடுத்து, சிறைத் துறை டிஜிபி எம்.கே.திவாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சிறைத் துறை கண்காணிப்பாளர், துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
    அதைத் தொடர்ந்து ரயில்வே துறை டிஜிபியாக இருந்த ரோஹித் செüதரி, சிறைத் துறையின் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், புதிய சிறைக் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    இந்தச் சம்பவத்தின் பின்னணியில் சதித் திட்டம் ஏதும் உள்ளதா? அல்லது பாதுகாப்புக் குறைபாடு உள்ளதா? என்பதை விசாரிப்பதற்காக சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மூன்று நாள்களில் அறிக்கை தாக்கல் செய்வார்கள்.
    ரூ.25 லட்சம் அறிவிப்பு: தப்பியோடிய குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றார் அவர்.
    அதைத் தொடர்ந்து, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவாலை தொடர்பு கொண்டு பேசிய சுக்பீர் சிங் பாதல், தாக்குதல் சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார்.
    உ.பி.யில் ஒருவர் கைது: இதனிடையே, நபா சிறைச் சாலை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பர்மீந்தர் என்பவரை உத்தரப் பிரதேச மாநில போலீஸார் கைது செய்தனர்.

    காங்கிரஸ் விமர்சனம்

    இந்நிலையில், மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்று மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
    பாதுகாப்பு மிகுந்த சிறைக்குள் ஆயுதத்துடன் வந்த கும்பல் அத்துமீறி தாக்குதல் நடத்திவிட்டு, காலிஸ்தான் பயங்கரவாதி உள்பட 5 பேரை மீட்டுச் சென்றுள்ளது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
    இந்தச் சம்பவத்தில் உயர்நிலையில் இருப்பவர்கள் உடந்தையாக செயல்பட்டது தெளிவாகிறது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai