Enable Javscript for better performance
போலியான போராட்டங்களுக்காக காங்கிரஸ் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்: வெங்கய்ய நாயுடு- Dinamani

சுடச்சுட

    

    போலியான போராட்டங்களுக்காக காங்கிரஸ் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்: வெங்கய்ய நாயுடு

    By DIN  |   Published on : 28th November 2016 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    venkiah-naidu

    கருப்புப் பணத்துக்கு எதிரான மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையைக் கண்டித்து, போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்களது போலியான போராட்டங்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு எச்சரிக்கை விடுத்தார்.
    இதுகுறித்து ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை மேலும் பேசியதாவது:
    மக்களால் ஓரங்கட்டப்பட்ட காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் திங்கள்கிழமை நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
    ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம் தொடர்பாக கடந்த ஒரு வாரமாக நாடாளுமன்றத்தின் இருஅவைகளையும் எதிர்க்கட்சிகள் மாறி மாறி முடக்கி வருகின்றனர்.
    அவை நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளைக் கேட்டுக் கொள்கிறேன். அப்போது மத்திய அரசின் நடவடிக்கை குறித்து விரிவாக விவாதிக்கலாம்.
    நீண்ட கால வேதனைகளுக்கு (கருப்புப் பணம், ஊழல்) பதிலாக குறுகிய கால வேதனைகளை தாங்கிக் கொள்ள பொது மக்கள் விருப்பம் தெரிவிக்கும்போது எந்த ஓர் அரசியல் கட்சியாலும் எப்படி கோபப்பட முடியும்?
    மக்களின் நாடித் துடிப்பில் இருந்து காங்கிரஸ் கட்சி வெட்டியெறியப்பட்டுவிட்டது. இந்நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முட்டாள்தனமான போராட்டங்களுக்கு அவர்கள் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். அதேபோல், இடதுசாரி கட்சிகள் எப்போதும் சரியாக இருக்க மாட்டார்கள் என மக்கள் நீண்ட காலமாக நம்புகின்றனர். எனவே அவர்களும் மக்கள் மனதில் இருந்து ஓரங்கப்பட்டுவிட்டனர்.
    மத்திய அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு உண்டு என்று தெரிந்தே, நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்துக்குப் பதிலாக கொந்தளிப்புப் பேரணிக்கு (ஆக்ரோஷ்) அழைப்பு விடுத்து காங்கிரஸ் தங்களது தந்திரத்தை மாற்றியுள்ளது.
    மக்கள் மனதிலும், நாடாளுமன்றத்திலும் காங்கிரஸýக்கு இடமில்லாததால், ஊடகங்களில் இடம் பிடிக்கலாம் என்ற நோக்கமே அதன் போராட்டத்துக்குக் காரணம்.
    செல்லாத நோட்டுகள் குறித்து கடந்த 8-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்கும்போதே, "லஞ்ச லாவண்யமற்ற தூய்மையான இந்தியாவை உருவாக்க மக்கள் இந்த சிரமத்தை ஏற்றுக் கொண்டு மத்திய அரசுக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்' என்று கேட்டு கொண்டிருந்தார்.
    மக்களும் பிரதமர் கேட்டுக் கொண்டதற்கிணங்க செயல்பட்டனர். இதில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஏன் ஆக்ரோஷம்?
    அரசின் மீது மக்களுக்கு அதிருப்தியிருந்திருந்தால் , கடந்த இரு வாரங்களாக பொறுமையோடு வரிசையில் நின்றிருக்க மாட்டார்கள்.
    55 ஆண்டுகளாக இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்ட ஊழல், அதிகார துஷ்பிரயோகம், உறவினர்களுக்கு சலுகை, பேராசை, துதிப்பாடல், சந்தர்ப்பவாதம், அடக்குமுறை, சுயநலன் ஆகிய 8 நலிந்த கலாசாரத்தை மோடி ஒழித்து வருகிறார் என்றார் வெங்கய்ய நாயுடு.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai