Enable Javscript for better performance
ரூபாய் நோட்டு விவகாரம்: இன்று ஆர்ப்பாட்டம் மட்டுமே; பந்த் அல்ல: காங்கிரஸ்- Dinamani

சுடச்சுட

  

  ரூபாய் நோட்டு விவகாரம்: இன்று ஆர்ப்பாட்டம் மட்டுமே; பந்த் அல்ல: காங்கிரஸ்

  By DIN  |   Published on : 28th November 2016 06:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  congress

  அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்ற விவகாரத்தைக் கண்டித்து நாடு முழுவதும் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் மட்டுமே நடத்தப்படும் என்றும் பந்த் நடத்த தாங்கள் அழைப்பு விடுக்கவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
  இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், தில்லியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
  அதிரடி அரசியலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நம்பிக்கை உண்டு. உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தோற்றுவிடும் என்பதற்கான அறிகுறிகள் அவருக்குத் தெரிந்திருக்கிறது. இதன் காரணமாகவே அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அவர் அறிவித்தார்.
  வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணம் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என்று மக்களவைத் தேர்தலின்போது பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. அதை நிறைவேற்ற முடியாததால், கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை அக்கட்சி தலைமையிலான மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது.
  அரசின் இந்த நடவடிக்கையால் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்போர் எவ்விதத் துன்பமும் அடையவில்லை. மாறாக, நேர்மையாக பணம் சம்பாதித்தவர்கள்தான் வங்கிகள் மற்றும், ஏடிஎம் மையங்களில் காத்துக் கிடக்கின்றனர்.
  காங்கிரஸýம் மற்ற கட்சிகளும் திங்கள்கிழமை பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தவறான தகவல் பரவி வருகிறது. மத்திய அரசின் முடிவைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் மட்டுமே நடைபெறவுள்ளது. பந்த் போராட்டத்துக்கு நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை.
  ரூபாய் நோட்டு வாபஸ் என்ற அறிவிப்புக்குப் பிறகு, கடந்த 9-ஆம் தேதியில் இருந்து நாட்டில் பொருளாதாரச் செயல்பாடுகள் ஸ்தம்பித்துள்ளன. புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க 250 நாள்கள் ஆகலாம். அன்றாடத் தேவைகளுக்காக இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரொக்கப் பணத்தையே பயன்படுத்துகின்றனர்.
  கருப்புப் பணம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை காங்கிரஸ் எப்போதும் ஆதரிக்கும். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள சூழலோ மிகவும் வித்தியாசமானது. ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை நாட்டில் உள்ள 2 சதவீதத்தினரே பயன்படுத்துகின்றனர் என்றார் ஜெய்ராம் ரமேஷ்.
  அவரிடம், "காங்கிரஸýடன் கூட்டணியில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த பிகார் முதல்வர் நிதீஷ்குமார், மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிரான உங்களுடைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லையே?' என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், "எங்கள் போராட்டத்துக்கு அக்கட்சித் தலைவர் சரத் யாதவ் ஆதரவளிக்கிறார்' என்றார்.
  அதிமுக குற்றச்சாட்டு: ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசாமல், நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசி வருவது, அரசமைப்பையும், ஜனநாயகத்தையும் அவமதிப்பது போன்றதாகும் என்று அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ "டாக்டர் நமது எம்ஜிஆர்' நாளேட்டின் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
  ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பிவரும் கேள்விகளுக்கு பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வெளியேதான் பதிலளித்துது வருகிறார். இது அரசமைப்பையும், ஜனநாயகத்தையும் அலட்சியப்படுத்துவது போன்றதாகும். கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவே அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்றதாக பாஜக அறிவித்துள்ளது.
  இத்தகைய கூற்று பல்வேறு ஓட்டைகளைக் கொண்ட வாளியில் நீரை வைத்துக்கொண்டு, பாலைவனத்தில் பயிர் செய்ய முயற்சிப்பது போன்றதாகும் என்று அந்தத் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai