Enable Javscript for better performance
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் மீது கூட்டு நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் மீது கூட்டு நடவடிக்கை

    By DIN  |   Published on : 08th October 2016 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு எதிராக கூட்டாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவாவில் நடைபெறவுள்ள "பிரிக்ஸ்' அமைப்பின் மாநாட்டில் இந்தியா வலியுறுத்தவுள்ளது.
    பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு, கோவாவில் வரும் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், மேற்கண்ட 5 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். மாநாட்டில், பயங்கரவாதிகளுக்கு புகலிடமும், ஆயுதங்களையும் தரும் நாடுகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா தீவிரமாக வலியுறுத்தவுள்ளது.
    இதுகுறித்து தில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சக செயலாளர் (பொருளாதார உறவு) அமர் சின்ஹா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    பயங்கரவாதம் என்பது அனைத்து நாடுகளுக்கும் பொதுவான பிரச்னையாக உள்ளது. இதை தனியொரு நாடால் எதிர்கொள்ள முடியாது. இதை அனைத்து நாடுகளும் கூட்டாக எதிர்கொள்ள வேண்டும்.
    பயங்கரவாதம் தொடர்பாக வேறுபட்ட கொள்கையை கடைப்பிடிக்க கூடாது. பயங்கரவாதிகளில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்ற வேறுபாடு கிடையாது. பிரிக்ஸ் மாநாட்டில் விவாதிக்கப்படும் திட்டங்களில் முக்கியப் பகுதியாக பயங்கரவாத பிரச்னை இருக்கும். பயங்கரவாதிகளுக்கு புகலிடமும், ஆயுத உதவியையும் அளிக்கும் நாடுகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா தீவிரமாக வலியுறுத்தும்.
    ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவருக்கு எதிராக ஐ.நா. மூலம் நடவடிக்கை எடுப்பதற்கு இந்தியா மேற்கொள்ளும் முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போடுவது குறித்து விவாதிக்கப்பட மாட்டாது. இது, சீனா-இந்தியா சம்பந்தப்பட்ட விவகாரமாகும். எனவே, பல்வேறு நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் அமைப்பில் இதுகுறித்து விவாதிக்க விரும்பவில்லை என்றார் சின்ஹா.
    பீம்ஸ்டெக் அமைப்பு: இதனிடையே, வெளியுறவு அமைச்சகச் செயலர் (கிழக்கு ஆசியா) பிரீத்தி சரண் கூறியதாவது: பிரிக்ஸ் மாநாட்டைத் தொடர்ந்து, பூடான், வங்கதேசம், இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பீம்ஸ்டெக் அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள அந்நாட்டின் தலைவர்கள், இந்தியாவுக்கு வரவுள்ளனர். அப்போது அந்த அமைப்புக்கு புத்துயிர் கொடுப்பது குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்துவார்கள் என்றார் பிரீத்தி சரண்.

    மோடி-புதின் வரும் 15-இல் சந்திப்பு

    கோவாவில் பிரதமர் நரேந்திர மோடியும், ரஷிய அதிபர் விளாதிமிர் புதினும் வரும் 15-ஆம் தேதி சந்தித்துப் பேசவுள்ளனர்.
    கோவாவில் வரும் 16-ஆம் தேதி பிரிக்ஸ் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க வரும் ரஷிய அதிபர் புதின், கோவாவில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசவுள்ளார். அப்போது, பாதுகாப்பு, ஆயுத தளவாட விற்பனை, வர்த்தகம், முதலீடு, பிராந்திய விவகாரம் உள்ளிட்டவை குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ரஷியாவிடம் இருந்து எஸ்-400 டிரையம் வான்பாதுகாப்பு ஏவுகணை, காமோவ்-28 ரக ஹெலிகாப்டர்கள், அகுலா ரக நீர்மூழ்கிக் கப்பலை இந்தியா வாங்குவது உள்ளிட்ட விவகாரம் குறித்தும் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai