Enable Javscript for better performance
பாகிஸ்தான் எல்லை மூடப்படும்: ராஜ்நாத் சிங் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பாகிஸ்தான் எல்லை மூடப்படும்: ராஜ்நாத் சிங் அறிவிப்பு

    By DIN  |   Published on : 08th October 2016 05:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ranjath

    இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியை மூடுவது தொடர்பாக, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (நடுவில்), ராஜஸ்தான் முதல்

    இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், வரும் 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் பாகிஸ்தான் எல்லையை முழுவதுமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அண்மையில் அதிரடித் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், எல்லையில் நிலவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, எல்லையை ஒட்டிய 4 மாநில உள்துறை அமைச்சர்களின் கூட்டத்துக்கு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்திருந்தார்.
    ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த இரண்டு நாள் கூட்டத்தில், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல், குஜராத் மாநில அமைச்சர் பிரதீப்சிங் ஜடேஜா, ஜம்மு-காஷ்மீர் மாநில தலைமைச் செயலர் பிஜ்ராஜ் சர்மா ஆகியோரும், எல்லைப் பாதுகாப்புப் படையின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
    இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் பின்னர் கூறியதாவது:
    பாகிஸ்தான் எல்லையை ஒட்டி பாதுகாப்பு வேலி அமைப்பது தொடர்பாக, எல்லை மாநிலங்கள் உள்பட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரிடமும் கருத்து கேட்கப்படும்.
    பாகிஸ்தானுடனான அனைத்து எல்லைகளையும், வரும் 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை மத்திய அரசின் சார்பில் மத்திய உள்துறை அமைச்சரும், பாதுகாப்புப் படைகளின் சார்பில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) உயரதிகாரிகளும், மாநில அளவில் தலைமைச் செயலர்களும் அவ்வப்போது ஆய்வு செய்வார்கள்.
    எல்லைப் பகுதியில், நதிப் படுகைகளும் குஜராத்தில் சர் கிரீக் மலைப் பகுதியும் உள்ளதால், எல்லையை மூடும் நடவடிக்கைக்கு பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்.
    நாட்டின் முன்பு மிகப்பெரிய சவால் உள்ள இந்த நேரத்தில், நாம் ராணுவப் படைகளின் பக்கம் நிற்க வேண்டும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரிக்கும்போது, நமது பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவு தந்து, அவர்கள் பக்கத்தில் நிற்க வேண்டும்.
    இந்த நேரத்தில் அனைத்து மக்களும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றார் ராஜ்நாத் சிங்.
    இந்தக் கூட்டம் சனிக்கிழமையும் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதன் பின்னர், ராஜஸ்தானில் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதிகளுக்குச் செல்லும் ராஜ்நாத் சிங், அங்குள்ள சோதனைச் சாவடிகளில் ஆய்வு நடத்த உள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai