Enable Javscript for better performance
பிகாரில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை- Dinamani

சுடச்சுட

    

    பிகாரில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை

    By DIN  |   Published on : 08th October 2016 02:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிகாரில் மதுவிலக்கை ரத்து செய்து பாட்னா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடை விதித்தது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய விளக்கமளிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
    பிகாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான மதச்சார்பற்ற மகா கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, அங்கு பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. உள்நாடு மற்றும் வெளிநாட்டு வகை மதுவகைகளை விற்கவோ, வாங்கவோ அல்லது அருந்தவோ தடை விதிக்கப்பட்டது.
    மாநில அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து மது உற்பத்தியாளர்கள் அமைப்பு, பார் உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில் பாட்னா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
    அதனை விசாரித்த உயர் நீதிமன்றம் பிகார் அரசின் மதுவிலக்கு நடவடிக்கை செல்லாது என்றும், அதனை ரத்து செய்வதாகவும் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பிகார் அரசு மேல் முறையீடு செய்தது. இதற்கு நடுவே, புதிய மதுவிலக்குச் சட்டம் ஒன்றை மாநிலத்தில் நிதீஷ் குமார் அரசு அமல்படுத்தியது. இதனால், பாட்னா உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகும் பிகாரில் பூரண மதுவிலக்கு நடைமுறையில் உள்ளது.
    இந்நிலையில், பிகார் அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், பாட்னா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிப்பதாகத் தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட அவர்கள், மனு மீதான விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai