Enable Javscript for better performance
மதச்சார்பற்ற இந்தியாவில் "தலாக்' முறைக்கு இடமில்லை- Dinamani

சுடச்சுட

    

    மதச்சார்பற்ற இந்தியாவில் "தலாக்' விவாகரத்து முறைக்கு இடமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    தலாக் முறையை எதிர்த்து நீதிமன்றத்தில் மத்திய அரசு கருத்துத் தெரிவித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
    முன்னதாக தலாக் விவாகரத்து முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இது தொடர்பாக பல்வேறு நிலைகளில் ஆலோசனை நடத்திய மத்திய அரசு, தலாக் விவாகரத்து முறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவிக்க ஏற்கெனவே முடிவு செய்திருந்தது.
    தலாக் முறைக்கு எதிர்ப்பு: இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சகம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள பாலின சமத்துவம், மதச்சார்பின்மை, திருமணச் சட்டம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் முஸ்லிம்கள் மத்தியில் நடைமுறையில் உள்ள மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து மேற்கொள்ளும் முறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறோம். பலதார மணத்துக்கு வழி வகுக்கும் இந்த தலாக் விவாகரத்து முறையை பல்வேறு முஸ்லிம் நாடுகளும் கைவிட்டுள்ளன.
    பெண்களுக்கு பாகுபாடு கூடாது: மதச்சார்பற்ற ஜனநாயக நாடான இந்தியாவில் பெண்களின் கண்ணியத்தையும், சமஉரிமையையும் மதத்தின் பெயரால் நிராகரிக்க முடியாது. சமூக ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும், உணர்வுரீதியாகவும் பெண்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதை ஏற்க முடியாது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகவும் திகழும் நமது தேசத்தின் வளர்ச்சியில் பெண்களுக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டியது அவசியம்.
    தலாக் கூறி விவாகரத்து பெறுவது, பலதார மணம் ஆகியவை மத வழக்கங்களில் இன்றியமையாத நடைமுறை அல்ல. மதச்சார்பற்ற நமது நாட்டின் அரசு எந்த மதத்தையும் சார்ந்தது அல்ல. அரசமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டே அரசு இயங்கி வருகிறது. எனவே, மதத்தின் பெயரால் பெண்களின் அடிப்படை உரிமையில் பாகுபாடு காட்ட முடியாது.
    முஸ்லிம் நாடுகளே மாற்றிவிட்டன: பாகிஸ்தான், வங்கதேசம், துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகள் கூட தங்கள் திருமணச் சட்டத்தை திருத்திவிட்டன. எனவே, மதச்சார்பற்ற இந்தியாவில் அதுபோன்ற சட்டங்களை மாற்றுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை' என்று 29 பக்க பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தேவைப்பட்டால் இது தொடர்பாக கூடுதல் விளக்கத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத் தயாராக இருப்பதாகவும் சட்டம், நீதித்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    வழக்கின் பின்னணி: முன்னதாக, உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த, தலாக் முறையில் விவாகரத்து செய்யப்பட்ட சாய்ரா பானு என்பவர் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்தார். இதேபோல ஜெய்ப்பூர், கொல்கத்தாவைச் சேர்ந்த பெண்கள் இருவரும் தலாக் விவாகரத்து முறையை எதிர்த்து மனு தாக்கல் செய்தனர்.
    இந்த மனுக்களை எதிர்த்து ஜாமியத்-உலமா-ஏ-ஹிந்த், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. அதில், "சீர்திருத்தம் என்ற பெயரில் தனிநபர் சட்டங்களில் மாற்றம் கொண்டு வரக்கூடாது. மேலும், முஸ்லிம் தனிநபர் சட்டம் என்பது குரானில் இருந்து எடுக்கப்பட்டது. எனவே, அதனை யாரும் பரீட்சித்துப் பார்க்கக் கூடாது' என்று வலியுறுத்தப்பட்டது. எனினும், பாரதிய முஸ்லிம் பெண்கள் அமைப்பு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கையெழுத்து இயக்கம் நடத்தியது. அதில், தலாக் முறையை ஒழிக்கக்கோரி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்களும், ஆண்களும் கையெழுத்திட்டனர்.
    பொதுமக்களிடம் கருத்து: இதனிடையே, முஸ்லிம்களின் தலாக் விவாகரத்து முறையை ஒழிப்பது, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்க சட்ட ஆணையம் முடிவு செய்துள்ளது.
    இது தொடர்பாக சட்ட ஆணையத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான பி.எஸ்.செளஹான் கூறியதாவது:
    பொது சிவில் சட்டம் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதன் மூலம் ஆக்கப்பூர்வமான யோசனைகள் கிடைக்கும் என்று நம்புகிறோம். இதன் மூலம் அனைத்து மதம் தொடர்பான சட்டங்களும் மறுஆய்வுக்கு உள்ளாகும். சமூக நீதி தொடர்பான பிரச்னைகள் தீர்க்கப்பட வாய்ப்பு ஏற்படும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai