Enable Javscript for better performance
மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ நிதி வழங்க உச்ச நீதிமன்றம் தடை- Dinamani

சுடச்சுட

    

    மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ நிதி வழங்க உச்ச நீதிமன்றம் தடை

    By DIN  |   Published on : 08th October 2016 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sc

    மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நிதி வழங்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடை விதித்துள்ளது.
    லோதா குழுவின் பரிந்துரைகளை பிசிசிஐ முழுமையாக அமல்படுத்தாததை அடுத்து உச்ச நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, பிசிசிஐ-யில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து லோதா குழு அளித்த பரிந்துரைகளை பிசிசிஐ ஏற்க மறுத்ததால் அந்த அமைப்புக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
    லோதா குழுவின் பரிந்துரைகளை பிசிசிஐ அமல்படுத்தாவிட்டால், நீதிமன்றமே நேரடியாக உத்தரவுகளை வழங்கும் என்றும் கூறியிருந்தது.
    இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, லோதா குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்தாத வரை மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் பிசிசிஐ நிதி அளிக்கக் கூடாது. ஏற்கெனவே அளிக்கப்பட்ட நிதியை மாநில கிரிக்கெட் சங்கங்கள் பயன்படுத்தக் கூடாது. லோதா குழுவின் பரிந்துரைகள் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் டேவிட் ரிச்சர்ட்சனிடம், பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர் பேசியது குறித்து அவர் தனிப்பட்ட முறையில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
    முன்னதாக, மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறி லோதா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த இயலாது என்று பிசிசிஐ தெரிவித்தது. இதையடுத்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு நிதியளிப்பதை பிசிசிஐ நிறுத்த வேண்டுமென்று லோதா குழு கூறியது. ஆனால், 12 மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் அண்மையில் தலா ரூ.25 கோடியை பிசிசிஐ அளித்தது. இதையடுத்து பிசிசிஐ-யின் பணப்பட்டுவாடாவை நிறுத்தி வைக்க வேண்டுமென்று வங்கிகளுக்கு லோதா குழு அறிவுறுத்தியது. இதையடுத்து, பிசிசிஐ வங்கிக் கணக்குகளை இதுபோன்று முடக்கினால் தற்போது நடைபெற்று வரும் இந்தியா - நியூஸிலாந்து கிரிக்கெட் தொடரை பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இதையடுத்து இந்த விவாகரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    லோதா குழுவின் பரிந்துரைகள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது பிசிசிஐ-யின் பல்வேறு செயல்பாடுகளுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ நிதி வழங்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai