Enable Javscript for better performance
ரயிலில் திருடுபோகும் செல்லிடப்பேசி, மடிக்கணினிகளுக்கு காப்பீடு: அரசு திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ரயிலில் திருடுபோகும் செல்லிடப்பேசி, மடிக்கணினிகளுக்கு காப்பீடு: அரசு திட்டம்

    By DIN  |   Published on : 08th October 2016 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரயில் பயணத்தில் செல்லிடப்பேசிகள், மடிக்கணினிகள் திருடுபோனால், அவற்றுக்கு இழப்பீடு பெற்றுத் தரும் வகையிலான காப்பீட்டு வசதியை அறிமுகப்படுத்த ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
    ரயில் பயணிகளுக்கு வெறும் 92 பைசாவுக்கு விபத்துக் காப்பீடு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், அதற்கு அடுத்தகட்டமாக இந்தப் புதிய வசதியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    இதுதொடர்பாக காப்பீட்டு நிறுவன நிர்வாகிகளுடன் ரயில்வே வாரிய அதிகாரிகள் தில்லியில் வெள்ளிக்கிழமை கலந்தாலோசித்தனர். பயணத்தின்போது கொண்டு செல்லப்படும் செல்லிடப்பேசி, மடிக்கணினி மற்றும் எலெக்ட்ரானிக் பொருள்களுக்கு காப்பீடு செய்வது குறித்தும், அதனைச் செயல்படுத்தவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
    இந்த வசதியை அறிமுகப்படுத்தினால், இழப்பீடு பெறுவதற்காக சிலர் போலியாக புகார் அளிக்க வாய்ப்புள்ளதாக காப்பீட்டு நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அத்தகையச் செயல்களைத் தவிர்ப்பதற்காக சில விதிகளையும், கட்டுப்பாடுகளையும் வகுக்கலாம் என்று ரயில்வே வாரியம் தரப்பில் ஆலோசனை வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.
    இதுகுறித்து ஐஆர்சிடிசி தலைவர் ஏ.கே.மனோச்சா, செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
    பயணிகளுக்கு விபத்துக் காப்பீடு வழங்குவதுடன், அவர்களுடைய பொருள்கள் திருடுபோனால் இழப்பீடு தருவதற்கான காப்பீட்டு வசதிகளையும் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். அதனைச் சரிசெய்து அந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகளை ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. போலி இழப்பீடு கோரிக்கைகளைத் தவிர்க்க முதல்கட்டமாக கடன் அட்டை வைத்துள்ளோருக்கும், அரசு ஊழியர்களுக்கும் இந்தக் காப்பீட்டு வசதியை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
    விரைவில் இதுகுறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai