Enable Javscript for better performance
ராணுவத்தை அவமதிக்கிறார் ராகுல்: அமித் ஷா- Dinamani

சுடச்சுட

    
    bjp-meet

    தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா.

    இந்திய ராணுவத்தை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அவமதிக்கிறார் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டினார்.
    பிரதமர் நரேந்திர மோடியை தரகர் (தலாலி) என்று ராகுல் காந்தி விமர்சித்தது குறித்து கூறுகையில், இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    இதுதொடர்பாக தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதல்கள் குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்தான் முதலில் சந்தேகம் எழுப்பினார். இதையடுத்து, கேஜரிவாலுக்கு ஆதரவு அளிப்பதுதான் பாகிஸ்தானின் முதல்பணியாக உள்ளது. இதை வைத்து பார்க்கும்போது கேஜரிவாலின் செயல் மூலம், யார் பயனடைகின்றனர் என்பது தெரிகிறது.
    தலாலி என்று விமர்சித்ததன் மூலம், ராகுல் காந்தி அனைத்து வரம்பையும் மீறிவிட்டார். இது மிகவும் மோசமான கருத்தாகும். இந்த வார்த்தையை தேர்வு செய்ததன்மூலம், நமது ராணுவ வீரர்களின் தைரியத்தையும், 125 கோடி மக்களையும் ராகுல் காந்தி அவமதித்து விட்டார்.
    மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, போபர்ஸ் பீரங்கி கொள்முதல், எம்ப்ரேயர் விமானம் கொள்முதல், 2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரிச் சுரங்க ஊழல் ஆகிய விவகாரங்களில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து, ராகுல் காந்தி தலாலி என்ற வார்த்தையை தற்போது தவறுதலாக தெரிவித்து விட்டார்.
    ராணுவ நடவடிக்கை மீது சந்தேகம் எழுப்புவோர், இந்திய எதிர்ப்பாளர்கள் ஆவர். ஒட்டுமொத்த நாடு, பாஜக, மத்திய அரசு ஆகியவை ராணுவத்தை உறுதியாக ஆதரிக்கின்றன. எனவே, ராணுவம் தொடர்பாக இந்திய எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கும் கருத்துகளை நாங்கள் பொருட்படுத்த மாட்டோம். இந்திய ராணுவத்தின் துப்பாக்கித் தோட்டாக்களை நாங்கள் நம்புகிறோம்.
    அரசியல் ஆதாயத்துக்காக இந்திய ராணுவத்தின் தாக்குதல்களை பாஜக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டப்படுவதை நிராகரிக்கிறேன். அதுதொடர்பாக பாஜக தலைவர்கள் யாரும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ராணுவ நடவடிக்கை குறித்த தகவலை ராணுவ நடவடிக்கைகள் இயக்குநர் ஜெனரலும், பாதுகாப்புத் துறை அமைச்சருமே நாட்டு மக்களுக்கு செய்தியாளர்கள் சந்திப்பின்மூலம் தெரியப்படுத்தினர்.
    ராணுவ நடவடிக்கையைக் கண்டு, நாடே மகிழ்ச்சியடைந்துள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் ஏன் இதில் மகிழ்ச்சியோ, பெருமிதமோ இல்லை. இது, காங்கிரஸ் அடிப்படையில் ஏதோ குறை இருப்பதை வெளிப்படுத்துகிறது. தேர்தல் பிரசாரத்தில் இதை பாஜக பயன்படுத்துமா? எனக் கேட்கிறீர்கள். இதை அரசியலாக்க நாங்கள் விரும்பவில்லை. ஆனால், நிச்சயம் இதை மக்களிடத்தில் பாஜக எடுத்துச் செல்லும்.
    காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டதாக அக்கட்சியின் தலைவர்கள் தெரிவிப்பதில் உண்மையில்லை. நாடு சுதந்திரமடைந்ததற்கு பிறகு, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியை தாண்டி, பயங்கரவாத முகாம்கள் மீது ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது இதுவே முதல்முறையாகும் என்றார் அமித் ஷா.
    காங்கிரஸ் பதிலடி: ராகுல் காந்தி மீதான அமித் ஷாவின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியபோது, சுவரொட்டி விளையாட்டை பாஜக நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
    தாம் என்ன பேசுகிறோம் என்று ராகுல் காந்திக்கு நன்குத் தெரியும். அவரது வார்த்தையின் பின்னணியில் இருக்கும் அர்த்தம் குறித்தும் நாட்டு மக்களுக்குத் தெரியும். சிறையில் இருந்தோர் எல்லாம், காங்கிரஸ் கட்சியின் அடிப்படையில் தவறு இருப்பதாக தெரிவிக்கின்றனர் என்றார் கபில் சிபல்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai