Enable Javscript for better performance
அருணாசலப் பிரதேச அரசில் பாஜக இணைந்தது- Dinamani

சுடச்சுட

    

    அருணாசலப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் அருணாசல மக்கள் கட்சியின் அரசில் பாஜக வெள்ளிக்கிழமை இணைந்தது. பாஜக எம்எல்ஏ தாமியோ தாகா புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
    நாட்டில் தற்போது கூட்டணி ஆட்சி நடைபெறும் 14-ஆவது மாநிலம் அருணாசலப் பிரதேசம் உள்ளது. அருணாசலப் பிரதேசத்தில் நபம் துகி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது.
    அக்கட்சி எம்எல்ஏக்களில் பெரும்பாலானோர் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதைத் தொடர்ந்து அவரது அரசு கடந்த ஜனவரி மாதம் கவிழ்ந்தது. அதன் பின் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியது.
    அதைத் தொடர்ந்து கலிகோ புல் தலைமையிலான அரசு, கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி பதவியேற்ற போதிலும் அந்த அரசு நீண்ட காலம் நிலைக்கவில்லை. அதன் பின், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெமா காண்டு, அருணாசலப் பிரதேசத்தின் புதிய முதல்வராக கடந்த ஜூலை 16-ஆம் தேதி பதவியேற்றார்.
    எனினும், அவர் தலைமையில் காங்கிரஸைச் சேர்ந்த 43 எம்எல்ஏக்கள் அருணாசல மக்கள் கட்சியில் கடந்த மாதம் 16-ஆம் தேதி இணைந்தனர்.
    தனக்கு ஆதரவளிக்கும் 42 எம்எல்ஏக்களை சட்டப் பேரவைத் தலைவர் டென்ஸிங் நோர்பு முன்னிலையில் பெமா காண்டு அணிவகுக்கச் செய்தார். அதை பேரவைத் தலைவரும் ஏற்றுக் கொண்டார்.
    இந்நிலையில், பெமா காண்டுவின் அமைச்சரவை வெள்ளிக்கிழமை மாற்றியமைக்கப்பட்டது. அதில் இடம்பெற்றிருந்த தொழில்துறை மற்றும் ஜவுளித்துறை அமைச்சரான தபங் தலோ நீக்கப்பட்டார்.
    அவருக்குப் பதிலாக பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான தாமியோ தாகா புதிய அமைச்சராகப் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வி.சண்முகநாதன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் பெமா காண்டுவின் அரசில் பாஜக இணைந்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai