Enable Javscript for better performance
அலிகர் பல்கலை. சிறுபான்மை அந்தஸ்தை மீட்கப் போராட்டம்: மாணவர் சங்கம்அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    அலிகர் பல்கலை. சிறுபான்மை அந்தஸ்தை மீட்கப் போராட்டம்: மாணவர் சங்கம் அறிவிப்பு

    By DIN  |   Published on : 15th October 2016 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக, போராட்ட இயக்கம் ஒன்றைத் தொடங்க இருப்பதாக அந்தப் பல்கலைக்கழக மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.
    அந்தப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவர் சங்கத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஃபைசல் ஹசன், இதுகுறித்துப் பேசியதாவது:
    நாட்டில் சிறுபான்மைச் சமூகத்தினரின் உணர்வுகளையும், அவர்களது உரிமைகளையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு புறக்கணிக்கிறது.
    நீதித் துறையின் மீது இந்திய முஸ்லிம்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். அதேசமயம், சிறுபான்மைச் சமூகத்தினர் தங்களது ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுவற்கு முழு உரிமை உள்ளது.
    இந்தப் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கு இயக்கம் ஒன்று தொடங்கப்படும். எங்களது போராட்டம், அடுத்த 30 நாள்களில் தில்லியைச் சென்றடையும். எங்களது முதல் நடவடிக்கையே ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்துவதுதான் என்றார் அவர்.
    அதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜமீருதீன் ஷா பேசுகையில், "எனது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. எனினும், எனது பதவிக்காலத்தின் கடைசி நாள் வரையில், பல்கலைக்கழகத்தை மேம்படுத்துவதற்கான எனது போராட்டம் தொடரும்' என்றார்.
    பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: இதனிடையே, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் உள்ள ஜவாஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியின் பயிற்சி மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அலிகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மருத்துவச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
    டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சைப் பெறுவதற்காக அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொறியியல் இறுதியாண்டு பயின்ற மாணவர் சபீர் ஹுசைன், கடந்த 25-ஆம் தேதி உயிரிழந்தார்.
    மருத்துவர்களின் அலட்சியத்தாலேயே சபீர் ஹுசைன் உயிரிழந்துவிட்டதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர். அதையடுத்து, பயிற்சி மருத்துவர் ஒருவரையும், செவிலியர் ஒருவரையும் பல்கலைக்கழக நிர்வாகம் பணியிடைநீக்கம் செய்தது.
    இந்நிலையில், உயிரிழந்த அந்த மாணவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் விகாஸ் என்பவரை, மாணவர் சங்கத்தின் புதிய தலைவரான ஃபைசல் ஹசனின் கூட்டாளி ஒருவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
    இதைக் கண்டித்து, மருத்துவக் கல்லூரியின் உறைவிட மருத்துவர்கள், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் சங்கத் தலைவர் ஃபைசல் ஹசனை பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர்கள், தங்களது போராட்டத்தை நீட்டிப்பது குறித்து விரைவில் முடிவு செய்ய இருப்பதாகக் கூறினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai