Enable Javscript for better performance
உடல் ஊனமுற்ற ராணுவ வீரர்களின் ஓய்வூதிய விவகாரம்:மத்திய அரசு மீது அமரீந்தர் சிங் குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    உடல் ஊனமுற்ற ராணுவ வீரர்களின் ஓய்வூதிய விவகாரம்: மத்திய அரசு மீது அமரீந்தர் சிங் குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 15th October 2016 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆயுதப்படைகளில் பணியாற்றி உடல் ஊனமுற்ற வீரர்களுக்கான ஓய்வூதிய விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, நாட்டைத் தவறாக வழிநடத்துகிறது என்று பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் குற்றம் சாட்டினார்.
    முன்னாள் ராணுவ வீரரான அவர், இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை மேலும் கூறியதாவது:
    நாட்டில் அனைத்து சமூகத்தினராலும், அனைத்துப் பிரிவினராலும் மதிக்கப்படும் ஒரே அமைப்பு ராணுவம்தான். அந்த அமைப்போடு விளையாடுவதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
    7-ஆவது ஊதியக் குழுவில் ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறாதது நகைப்புக்குரியதாக உள்ளது.
    சில குறிப்பிட்ட தகவல்களை மட்டும் வெளியிட்டு, உடல் ஊனமுற்ற ராணுவ வீரர்களின் ஓய்வூதியம் குறைக்கப்படவில்லை என்று மத்திய அரசு கூறிவருகிறது. உண்மையில், ராணுவத்தின் பல்வேறு முக்கியப் பிரிவுகளில் பணியாற்றிய உடல் ஊனமுற்ற ராணுவ வீரர்களின் ஓய்வூதியம் குறைக்கப்பட்டுள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி, பல்வேறு நிலைகளில் பணியாற்றும் ராணுவ வீரர்கள் ஏராளமானோர் பலனடையமாட்டார்கள்.
    உடல் ஊனமுற்றவர்கள் உள்பட அனைத்துப் பயனாளிகளின் ஓய்வூதியத்தை 2.57 மடங்கு ஊதியக் குழு உயர்த்தியுள்ளது. ஆனால், ராணுவத்தில் பணியாற்றி உடல் ஊனமுற்ற வீரர்களின் ஓய்வூதியம் குறைக்கப்பட்டுள்ளது. சில பிரிவினருக்கு பாதிக்கும் மேலாகக் குறைக்கப்பட்டுள்ளது.
    ஆயுதப்படையில் மத்திய அரசு தேவையின்றி வேண்டுமென்றே குழப்பத்தை உருவாக்கி வருகிறது. இது, நாட்டின் பாதுகாப்புக்கும், எதிர்காலத்துக்கும் மிகப்பெரிய அபாயத்தை உருவாக்கும்.
    துணை ராணுவப் படையினரின் ஊதியத்தைவிட ஆயுதப் படையினரின் ஊதியம் குறைவாக உள்ளது. இதுபோன்ற வேறுபாடு, ராணுவத்தினருக்கும், துணை ராணுவத்தினருக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்தும். இதுபோன்ற சூழலை நாட்டில் ஏற்படுத்தக் கூடாது என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai