Enable Javscript for better performance
கேரளத் தொழில்துறை அமைச்சர் ராஜிநாமா: அரசுப் பணி நியமன முறைகேடுகள் எதிரொலி- Dinamani

சுடச்சுட

    

    கேரளத் தொழில்துறை அமைச்சர் ராஜிநாமா: அரசுப் பணி நியமன முறைகேடுகள் எதிரொலி

    By DIN  |   Published on : 15th October 2016 03:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jayarajan

    அரசுப் பணி நியமன முறைகேடு புகாரில் சிக்கிய கேரள மாநிலத் தொழில் துறை அமைச்சர் இ.பி. ஜெயராஜன் அமைச்சரவையிலிருந்து வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தார்.
    இது, அந்த மாநிலத்தில் ஆட்சிபுரியும் மார்க்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
    கேரளத்தில் தொழில்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்தவர் இ.பி.ஜெயராஜன். இவர் தனது நெருங்கிய உறவினரான பி.கே. சுதீர் நம்பியாரை கேரளத் தொழில்துறை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணி அமர்த்தினார். அதேபோல், தனது சகோதரரின் மருமகளான தீப்தி நிஷாந்தையும் வேறொரு பொதுத்துறை நிறுவனத்தில் பணி நியமனம் செய்தார்.
    இந்நிலையில், இந்தப் பணி நியமனங்களில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்தது. மேலும், இதுதொடர்பாக அமைச்சர் ஜெயராஜன் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி கேரள சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
    இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக மாநில சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை கூடியது. அப்போது, இந்த பணி நியமனங்கள் தவறான முறையில் நடைபெற்றதாக ஜெயராஜன் ஒப்புக்கொண்டார்.
    மேலும், இதற்கு பொறுப்பேற்கும் வகையில் அமைச்சரவையிலிருந்து ராஜிநாமா செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
    ஜெயராஜனின் இந்த முடிவை சட்டப்பேரவைக் குழு ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
    இந்தக் கூட்டம் முடிந்த பின்னர் வெளியே வந்த ஜெயராஜனிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். ஆனால், அவர் பதில் ஏதும் கூறவில்லை.
    மாறாக, "இப்போது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்குமே' என்று கோபத்துடன் கூறியபடியே சென்றார்.
    கொடியேறி பாலகிருஷ்ணன் விளக்கம்: இந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் பின்னர் கூறியதாவது:
    கட்சியின் நற்பெயரைக் காப்பாற்றுவதற்காக ஜெயராஜனின் ராஜிநாமா முடிவை சட்டப்பேரவைக் குழு ஏற்றுக்கொண்டது. இதற்கு முன்பு கேரளத்தில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அமைச்சர்கள் மீது ஏராளமான புகார்கள் வந்தன. ஆனால், அப்போது ஒருவர் கூட ராஜிநாமா செய்யவில்லை.
    இந்த விவகாரத்தில் ஜெயராஜன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுதான் முடிவெடுக்க வேண்டும் என்றார் அவர்.
    ஊழல் தடுப்பு அமைப்பு விசாரணை: இதனிடையே, ஜெயராஜன் மேற்கொண்ட பணி நியமனங்கள் தொடர்பாக மாநில ஊழல் தடுப்பு அமைப்பு விசாரிக்க முடிவெடுத்துள்ளது. இதுகுறித்த தகவலை கேரள சிறப்பு நீதிமன்றத்தில் அந்த அமைப்பு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai