Enable Javscript for better performance
கோவாவில் பிரிக்ஸ் மாநாடு: பயங்கரவாத பிரச்னையை இந்தியா எழுப்பக்கூடும்- Dinamani

சுடச்சுட

    

    கோவாவில் பிரிக்ஸ் மாநாடு: பயங்கரவாத பிரச்னையை இந்தியா எழுப்பக்கூடும்

    By DIN  |   Published on : 15th October 2016 03:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    BRICS

    பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்க வரும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், சீன அதிபர் ஜீ ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களுடனான சந்திப்பின்போது, பாகிஸ்தானில் இருந்து உருவாகும் பயங்கரவாதம் குறித்த விவகாரத்தை இந்தியத் தரப்பு எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    கோவா தலைநகர் பனாஜியில் பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் "பிரிக்ஸ்' அமைப்பின் மாநாடு, வரும் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மேற்கண்ட நாடுகளின் தலைவர்களும், பிரதிநிதிகள் குழுவினரும் பங்கேற்க உள்ளனர்.
    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரியில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பின் சில வாரங்களுக்குள் இந்த மாநாடு நடைபெறுகிறது. எனவே, பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் நாடுகளுக்கு எதிரான நடவடிக்கை உள்பட பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மாநாட்டின்போது இந்தியா வலுவாக எழுப்பும் என்று தெரிகிறது.
    குறிப்பாக, மாநாட்டுக்கு இடையே ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகிய தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு சந்திப்புகளை நடத்த உள்ளார். அப்போது, பயங்கரவாதம் உள்ளிட்ட பிரச்னைகளை அவர் எழுப்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
    அண்மையில் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்திலும், ஜி-20 நாடுகளின் மாநாட்டிலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரித்து வருவது குறித்து இந்தியா வலுவான முறையில் சுட்டிக் காட்டியது.
    ஜி-20 மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் "தெற்காசியாவில் ஒரு குறிப்பிட்ட நாடு இந்தப் பிராந்தியத்தில் பயங்கரவாதத்தைப் பரப்புகிறது. அந்த நாட்டைத் தனிமைப்படுத்த வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.
    ஐ.நா.வில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசுகையில் "உரி உள்பட இந்தியாவில் நடைபெற்ற தாக்குதல்களில் தொடர்புடையவர்களில் சிலர் பிடிபட்டுள்ளனர்.
    அவர்கள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் உடந்தையாக இருப்பதற்கு வாழும் ஆதாரங்களாக உள்ளனர்' என்று குறிப்பிட்டிருந்தார்.
    பிரிக்ஸ் மாநாட்டின் இரண்டாவது நாளான 16-ஆம் தேதி, இந்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் குழுவாகப் புகைப்படம் எடுத்துக் கொள்வர். அதைத் தொடர்ந்து, தலைவர்களிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.
    அப்போது, பொருளாதாரம், சுற்றுலா, தொடர்புகள், கலாசாரம், கல்வி, விளையாட்டு ஆகிய துறைகளில் ஒத்துழைத்துச் செயல்படுவது குறித்தும், ஆப்கன், சிரியா, சூடான் ஆகிய நாடுகளில் உள்ள பாதுகாப்பு நிலவரம் குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    அதன்பின், உறுப்பு நாடுகளின் வர்த்தகம், தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் சந்தித்துப் பேச உள்ளனர்.
    இறுதியாக, பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைவர்கள் உரையாற்றுவர். அதைத் தொடர்ந்து பிரிக்ஸ் கூட்டமைப்பு தவிர, பூடான், வங்கதேசம், நேபாளம், இலங்கை, தாய்லாந்து, மியான்மர் ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கும் "பிம்ஸ்டெக்' மாநாடும் நடைபெற உள்ளது.
    அப்போது, பல்வேறு துறைகளில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கு "வங்காள விரிகுடா முன்முயற்சித் திட்டத்துக்கு' புத்துயிரூட்ட இந்தியா நடவடிக்கை எடுக்க உள்ளது.
    வளர்ச்சிக்கான செயல்திட்டம்


    பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாட்டையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி முகநூலில் வெளியிட்ட பதிவில், வளர்ச்சி, அமைதி, சீர்திருத்தம் ஆகியவற்றுக்கான செயல்திட்டத்தை இந்த மாநாடு முன்னெடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:
    பிரிக்ஸின் புதிய வளர்ச்சி வங்கி, நெருக்கடி கால நிதித் தொகுப்பு உள்ளிட்ட முன்முயற்சிகளை வெற்றிகரமாக அமல்படுத்தியதைத் தொடர்ந்து மேலும் புதிய முன்முயற்சிகளும் கோவா மாநாட்டில் தொடங்கப்பட உள்ளன.
    புதிய தோழமைகளுக்கு இணைப்புப்பாலம் அமைக்கவும், இந்தப் பிராந்தியத்தின் சிக்கலான பிரச்னைகளுக்கு பொதுவான தீர்வுகளைக் காணவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று மோடி தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai