Enable Javscript for better performance
சமாஜவாதியின் முதல்வர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்குப் பிறகு முடிவு: முலாயம்சிங்- Dinamani

சுடச்சுட

    

    சமாஜவாதியின் முதல்வர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்குப் பிறகு முடிவு: முலாயம்சிங்

    By DIN  |   Published on : 15th October 2016 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mulayamsing

    உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெவில் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்த சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங். உடன் அவரது சகோதரரும், கட்சியின் உத்தரப் பிரதேச மாநிலத் தலைவருமான சிவ்பால் யாதவ்


    சமாஜவாதி கட்சியின் முதல்வர் பதவி வேட்பாளர் யார் என்பது குறித்து, தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் தெரிவித்தார்.
    அவரது இந்த அறிவிப்பு, தற்போது முதல்வர் பதவியை வகிக்கும் அவரது மகன் அகிலேஷ் யாதவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
    இதுகுறித்து லக்னௌவில் முலாயம் சிங் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
    தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களாலும், கட்சியின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களாலும் முதல்வர் பதவிக்குரியவர் தேர்வு செய்யப்படுவார். கட்சியின் முதல்வர் பதவி வேட்பாளரை தேர்வு செய்வது எங்களது பணியாகும். இது உங்களுடைய (ஊடகம்) பணி கிடையாது என்றார் அவர்.
    அப்போது முலாயம் சிங்கிடம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், முதல்வர் அகிலேஷ் யாதவால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஜானேஷ்வர் மிஸ்ரா தொண்டு அலுவலகம் குறித்தும், லோஹியா நினைவு தின நிகழ்ச்சிக்கு முலாயம் வந்தபோது அகிலேஷ் யாதவ் புறக்கணித்தது குறித்தும் கேட்கப்பட்டது. அதற்கு முலாயம் அளித்த பதில்: "குடும்பத்தினர் இடையே மோதல் இல்லை. அகிலேஷ் யாதவை சிவ்பால் வெள்ளிக்கிழமை காலை பார்த்து பேசினார். கடந்த தேர்தலில், எனது பெயரை முன்வைத்து கட்சி போட்டியிட்டது. ஆனால் நான்தான் அகிலேஷை முதல்வராக்கினேன். எனவே இந்த முறையும், முதல்வர் யார் என்பதை நான்தான் முடிவு செய்வேன்' என்று மழுப்பலாக பதிலளித்தார்.
    சமாஜவாதி கட்சியின் உத்தரப் பிரதேச தலைவர் பதவியிலிருந்து அகிலேஷ் யாதவை முலாயம் சிங் அண்மையில் நீக்கினார். அந்தப் பதவியில் தனது சகோதரர் சிவ்பால் சிங் யாதவை அவர் நியமித்தார். இதனைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு விரைவில் நடைபெறவிருக்கும் தேர்தலில், அகிலேஷை முதல்வர் வேட்பாளராக அறிவிக்காமல், தேர்தலுக்குப் பிறகு அதுகுறித்து முடிவு செய்யப்படும் என முலாயம் சிங் அறிவித்துள்ளார்.
    "பொது சிவில் சட்ட விவகாரத்தைமதத் தலைவர்களிடம் விட்டுவிட வேண்டும்'
    பொது சிவில் சட்ட பிரச்னையை மதத் தலைவர்களிடம் விட்டுவிட வேண்டும் என்று முலாயம் சிங் தெரிவித்தார்.
    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
    இந்த விவகாரத்தில் அதிகம் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், இதை பிரச்னையாக்க கூடாது. பொது சிவில் சட்ட விவகாரத்தை மதத் தலைவர்களிடம் விட்டுவிட வேண்டும். நாடு மற்றும் மனிதநேயம் தொடர்பான விவகாரங்களில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
    இதற்கு முன்பும், பொது சிவில் சட்ட பிரச்னை எழுப்பப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம், புணேயில் சமூக சிந்தனையாளர் ராம் மனோகர் லோஹியா பேசியபோது, குரான், பகவத் கீதை, ராமாயணம் ஆகியவை மனித நேயத்தையே போதிக்கின்றன என்று குறிப்பிட்டார். அவரது உரையின் விளைவாக, பொது சிவில் சட்டப் பிரச்னையால் நிலவிய பதற்றம் காணாமல் போய்விட்டது என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai