Enable Javscript for better performance
தலாக் நடைமுறை: உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கு விட்டு விட வேண்டும்: தாரிக் அன்வர்- Dinamani

சுடச்சுட

    

    தலாக் நடைமுறை: உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கு விட்டு விட வேண்டும்: தாரிக் அன்வர்

    By DIN  |   Published on : 15th October 2016 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    anwar

    முஸ்லிம் மதத்தில் விவாகரத்து பெற பின்பற்றப்படும் தலாக் நடைமுறை தொடர வேண்டுமா? வேண்டாமா? என்பதை உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கு விட்டுவிட வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.பியுமான தாரிக் அன்வர் தெரிவித்தார்.
    இதுதொடர்பாக பிகார் மாநிலம், கதிகாரில் அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
    தனிப்பட்ட முறையில், தலாக் நடைமுறைக்கு முடிவுகட்டப்பட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். பல முஸ்லிம் நாடுகள், இந்த நடைமுறைக்கு ஏற்கெனவே முடிவுகட்டி விட்டன. இந்த நடைமுறைக்கு முடிவுகட்டப்பட வேண்டும் என்று முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பல பெண்கள் அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பான பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு அரசமைப்புச் சட்டமும், நீதித்துறையும் சரியான அமைப்புகள் ஆகும்.
    ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பிரச்னைக்கு, அந்த மாநிலத்தை ஆளும் பாஜக-மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி அரசே காரணம் ஆகும். சட்டம்-ஒழுங்கு பிரச்னையை அந்த மாநில அரசு கையாண்ட விதத்தை பார்த்த மக்கள், தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாக உணருகின்றனர்.
    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து துல்லியத் தாக்குதல் (சர்ஜிகல் ஸ்டிரைக்) நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்த பெருமை, இந்திய ராணுவத்தையேச் சாரும். ஆனால், பிரதமர் நரேந்திர மோடியும், அவரது தலைமையிலான மத்திய அரசும், அந்த பெருமையை எடுத்துக் கொள்வது நகைப்புக்குரிய செயலாகும் என்றார் தாரிக் அன்வர்.
    பிகார் மாநிலம், கதிகார் மக்களவைத் தொகுதி எம்.பி.யாக தாரிக் அன்வர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai