Enable Javscript for better performance
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல்: நாடாளுமன்றக் குழுவிடம் ராணுவம் விளக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல்: நாடாளுமன்றக் குழுவிடம் ராணுவம் விளக்கம்

    By DIN  |   Published on : 15th October 2016 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் தொடர்பாக, பாதுகாப்புத் துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் ராணுவ அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
    இதுகுறித்து அந்த நிலைக் குழுவின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான மேஜர் ஜெனரல் பி.சி.கந்தூரி, தில்லியில் பிடிஐ செய்தியாளரிடம் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
    பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்த நடவடிக்கை தொடர்பாக, நாடாளுமன்ற நிலைக் குழுவின் முன்பு ராணுவத்தின் துணைத் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பிபின் ராவத் விளக்கமளித்தார். அவரது விளக்கம் எங்களுக்குத் திருப்திகரமாக இருந்தது. ராணுவ நடவடிக்கைக்கான காரணங்களை பிபின் ராவத் எங்களிடம் தெரிவித்தார்'' என்றார் கந்தூரி.
    இந்நிலையில், குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி. மதுசூதன் மிஸ்திரி சில கேள்விகளை எழுப்ப முயன்றதாகவும், ஆனால், அந்தக் கேள்விகளை அனுமதிக்க பி.சி.கந்தூரி மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
    இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் கந்தூரி விளக்கமளித்ததாவது:
    எங்களது கூட்டத்தில் நடந்தது குறித்து எதுவும் கூற முடியாது. இது, நிலைக் குழுவிடம் ராணுவம் தகவல் பகிர்ந்துகொள்வதற்கான சந்திப்பே தவிர, விவாதத்துக்கான கூட்டம் அல்ல. அது கேள்வி-பதில் நிகழ்ச்சியாக இருக்கவில்லை. சில விஷயங்களை பொதுவெளியில் தெரிவிக்க முடியாது என்றார்.
    பாக். செய்திக்கு மறுப்பு: இதனிடையே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய ராணுவம் அழித்ததாகக் கூறப்படுவது பொய்யானது என்று பாகிஸ்தானில் வெளியாகும் "தி நியூஸ் இண்டர்நேஷனல்' ஊடகத்தில் செய்தி வெளியிட்டிருப்பதற்கு இந்திய வெளியுறவுத் துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
    இதுகுறித்து வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    கடந்த மாதம் 29-ஆம் தேதி இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தபோது, அதுதொடர்பாக பல்வேறு நாடுகளின் தூதர்கள் அடங்கிய குழுவிடம் வெளியுறவுத் துறைச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் விளக்கமளித்தார். அந்தக் குழுவில் ஜெர்மன் தூதர் மார்டின் நேவும் இடம்பெற்றிருந்தார். அதன் பிறகு, ராணுவ நடவடிக்கை தொடர்பாக இருவரும் பேசிக் கொள்ளவில்லை.
    இந்நிலையில், இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் மேற்கொண்டதாகக் கூறப்படுவது பொய்தான் என்று மார்டீன் நேவிடம் ஜெய்சங்கர் ஒப்புக்கொண்டதாக, பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் "தி நியூஸ் இண்டர்நேஷனல்' செய்தி வெளியிட்டிருந்தது, ஜோடிக்கப்பட்டதும் ஆதாரமற்றதும் ஆகும் என்றார் விகாஸ் ஸ்வரூப்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai