Enable Javscript for better performance
பிரணாப் முகர்ஜிக்கு மீண்டும் குடியரசுத் தலைவர் பதவி: சிவசேனை வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    பிரணாப் முகர்ஜிக்கு மீண்டும் குடியரசுத் தலைவர் பதவி: சிவசேனை வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 15th October 2016 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவர் பதவிக்கு தற்போது அந்தப் பதவியை வகித்துவரும் பிரணாப் முகர்ஜியையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சிவசேனைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
    இதுகுறித்து அக்கட்சியின் மாநிலங்களவைத் தலைவர் சஞ்சய் ராவத், தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
    குடியரசுத் தலைவராக மீண்டும் பிரணாப் முகர்ஜியைத் தேர்வு செய்ய வேண்டும். அவரை அடுத்த வாரம் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேச இருக்கிறேன். அப்போது, தாங்கள் சிறந்த குடியரசுத் தலைவர் என்பதை நிரூபித்து விட்டீர்கள் என்று தெரிவிக்க இருக்கிறேன். அவரது திறமையை யாராலும் சந்தேகிக்க முடியாது. கடந்த 5 ஆண்டுகளாக எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல், தனது பணியை அவர் மிகச் சிறப்பாக மேற்கொண்டிருக்கிறார். உள்நாட்டு விவகாரம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து அவர் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார் என்றார் அவர்.
    பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் சிவசேனை கட்சி, 2-ஆவது முறையாக பிரணாப் முகர்ஜியை குடியரசுத் தலைவராக தேர்வு செய்ய மற்ற கட்சிகளிடம் ஆதரவு கோருமா? என்று ராவத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
    அதற்கு அவர், "சிவசேனை கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேதான் அதுகுறித்து முடிவெடுக்க வேண்டும்' என்று பதிலளித்தார்.
    இதனிடையே, காங்கிரஸ் தலைமை இதுகுறித்து ஆலோசிக்கும் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாள் ஷோபா ஓஸா தெரிவித்தார்.
    காங்கிரஸ் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரணாப் முகர்ஜி தேர்வு செய்யப்பட்டபோது (2012), அவருக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக பாஜக கூட்டணியை சிவசேனை முறித்துக் கொண்டது. எனினும், தற்போது அக்கட்சியுடன் கூட்டணியில் சிவசேனை உள்ளது. பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜூலை 25-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai