Enable Javscript for better performance
மதரீதியிலான அடக்குமுறையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது- Dinamani

சுடச்சுட

    

    மதரீதியிலான அடக்குமுறையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது

    By DIN  |   Published on : 15th October 2016 05:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rajnath-sing

    இந்தியாவை "சகிப்புத்தன்மையின் பல்கலைக்கழகம்' என்று வர்ணித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டில் மதரீதியிலான அடக்குமுறையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிறிஸ்தவ கவுன்சில் சார்பில் தில்லியில் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
    கிறிஸ்தவ மதமானது இந்தியாவுக்கு சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது. கேரளத்தில் புனித தோமையார் ஆலயம் அமைந்தது. இது உலகின் மிகத் தொன்மையான தேவாலயங்களில் ஒன்றாகும்.
    புனித தோமையார் முதல் அன்னை தெரஸா வரை கிறிஸ்தவர்கள் ஆற்றிய பங்களிப்பை இந்தியா என்றும் மறக்காது. அவர்கள் நமது சமூகத்தில் உள்ள தீமைகளை அகற்றப் போராடினர். புனித தோமையார், சகோதரி நிவேதிதா, பிகாஜி காமா, அன்னை தெரஸா உள்ளிட்ட அருளாளர்கள் அனைவருமே இந்தியாவில் மதித்துப் போற்றப்பட்டனர். சகிப்புத்தன்மையின் பல்கலைக்கழகமாக இந்தியா இருந்திருக்காவிட்டால் இவர்களுக்கு இத்தகைய மரியாதை திடைத்திருக்காது.
    இங்கு நமது கருத்தை நாம் யார் மீதும் திணிப்பதில்லை. நாட்டில் சகிப்புத்தன்மை அந்த அளவுக்கு உள்ளது. கடவுள் ஒருவரே. அவரைப் பற்றிய விளக்கங்கள்தான் பல்வேறு வகைகளில் இருக்கின்றன.
    தில்லியில் கடந்த சட்டப்பேரவைக்கு தேர்தலுக்கு முன், தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆனால், தேர்தலுக்கு முன்போ, பின்போ, இந்தியாவில் மதரீதியிலான அடக்குமுறையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதைக் கூற விரும்புகிறேன்.
    பாகிஸ்தான் மீது தாக்கு: கடந்த 1947இல் இந்தியா மத அடிப்படையில் பிரிக்கப்பட்டது. அப்படி இருந்தும் மதச்சார்பற்ற நாடாக இருக்கவே இந்தியா விரும்பியது. நம்மிடம் இருந்து பிரிந்து சென்ற நாடு (பாகிஸ்தான்) தன்னை ஒரு மதச்சார்புடைய நாடு என்று பிரகடனம் செய்து கொண்டது.
    சில நாடுகள் தங்களின் அரசுக் கொள்கையாக பயங்கரவாதத்தை வைத்திருப்பது துரதிருஷ்டவசமானது. மக்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அவற்றை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடியுமே தவிர, துப்பாக்கிகளால் தீர்க்க முடியாது.
    ஒரு பயங்கரவாதி எந்தவொரு ஜாதியையோ, இனத்தையோ, மதத்தையோ சார்ந்தவர் கிடையாது. இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. சிலர் மதத்துடன் பயங்கரவாதத்தைத் தொடர்புபடுத்துகின்றனர். எனினும் அது தவறானது.
    இந்தியாவில் அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்கள் மதிக்கப்படுகின்றனர். இந்த நாட்டில்தான் இஸ்லாம் மதத்தின் அனைத்துப் பிரிவினரும் வாழ்கின்றனர். அனைத்து முக்கிய மதங்களைச் சேர்ந்தவர்களும் இந்தியாவில் உள்ளனர் என்றார் ராஜ்நாத் சிங்.
    இந்தக் கூட்டத்தில் பாஜக எம்.பி.யும் தேசிய எஸ்சி, எஸ்டி அமைப்புகளின் அகில இந்திய கூட்டமைப்பின் தலைவருமான உதித் ராஜ், நல்ல மேய்ப்பர் தேவாலயத்தின் ஆயரும், அகில இந்திய கிறிஸ்தவ கவுன்சிலின் தலைவருமான ஜோசஃப் டிசௌஸா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai