

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி கேரள சட்டப் பேரவையில் வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆளும் இடதுசாரி முன்னணி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்தத் தீர்மானத்தை ஆதரித்தன. அதேவேளையில் பாஜக எம்எல்ஏ ஓ.ராஜகோபால் மட்டும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
முன்னதாக இதுதொடர்பாக பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய ஆளுங்கட்சி உறுப்பினர்கள், இந்த விவகாரத்தில் மத்திய அரசு நடந்துகொள்ளும் விதம் பாசிஸ செயல்பாட்டைப் போல உள்ளதாகத் தெரிவித்தனர்.
பசு, எருது, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக் கூடாது என்று மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது. மேலும், மாடுகளை வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்காக மட்டுமே பரஸ்பரம் விற்பனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த உத்தரவானது நாடு முழுவதும் கடுமையான விமர்சனங்களுக்கு வித்திட்டது. மத்திய அரசின் இந்த முடிவு, தனிமனித உரிமைகளைப் பறிக்கும் செயல் என்றும் விமர்சிக்கப்பட்டது. கேரளம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் தடையை மீறி மாட்டிறைச்சி திருவிழாவையும் நடத்தியது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்கும், உரிய முடிவுகளை எடுப்பதற்கும் கேரள சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக மாநில அரசு எடுக்கப்போகும் நிலைப்பாடுகள் குறித்து இறுதி செய்யும் நோக்கில் இக்கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது மாடுகளை விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெறக் கோரி தீர்மானம் முன்மொழியப்பட்டது. அதன் மீதான விவாதத்தில் பேசிய ஆளுங்கட்சி மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள், "இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக் கூடாது என்று வெளியான உத்தரவு மதரீதியானது மட்டுமல்ல; விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் எதிரான நடவடிக்கை' என்றனர்.
இதைத் தொடர்ந்து பேசிய பாஜக உறுப்பினர் ராஜகோபால், "மாடுகள் விற்பனை தொடர்பான உத்தரவில் தேவைப்பட்டால் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்ட நிலையில், தற்போது இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டிய அவசியம் இல்லை' என்றார்.
இதனிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை சிலர் புதன்கிழமை தாக்க முயன்ற விவகாரமும் பேரவையில் எதிரொலித்தது. எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க தனது அதிகாரத்தை ஹிந்துத்துவ அமைப்புகள் பயன்படுத்துகின்றன என்று ஆளுங்கட்சி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இறுதியில் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிரான தீர்மானம் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.