குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு? சிவசேனை விளக்கம்

குடியரசுத் தலைவர் தேர்தலில் எவருக்கு வாக்களிப்பது என்பது குறித்து சுயமான நிலைப்பாட்டை எடுக்க வாய்ப்புள்ளதாக சிவசேனை தெரிவித்துள்ளது.
Published on
Updated on
1 min read

குடியரசுத் தலைவர் தேர்தலில் எவருக்கு வாக்களிப்பது என்பது குறித்து சுயமான நிலைப்பாட்டை எடுக்க வாய்ப்புள்ளதாக சிவசேனை தெரிவித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை அப்பதவிக்கான வேட்பாளராக பாஜக முன்னிறுத்த வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் அடுத்த சில வாரங்களில் நிறைவடைவதையொட்டி, அதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தேசிய அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. பாஜகவுக்கு எதிராக பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து வருகின்றனர்.
இதனிடையே, பாஜக சார்பில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட மூத்த தலைவர்களில் ஒருவர் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம் என செய்திகள் வெளியாகின.
ஆனால், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அவர்களுக்கு எதிராக மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருவதால், வேறு ஒருவரை வேட்பாளராக்க பாஜக தலைமை திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.
இந்தச் சூழலில், மோகன் பாகவத்தை குடியரசுத் தலைவர் வேட்பாளராக்க வேண்டும் என்று பாஜகவை, அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனை வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசிலும், மகாராஷ்டிர அரசிலும் சிவசேனை அங்கம் வகித்து வந்தாலும், பாஜகவுடன் அக்கட்சி மோதல் போக்கையே கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத், ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் எவருக்கு வாக்களிப்பது என்பது குறித்து சுயமான நிலைப்பாட்டையே சிவசேனை எடுக்க வாய்ப்புள்ளது. ஹிந்து ராஜ்ஜியக் கனவைப் பூர்த்தி செய்வதற்கான ஆற்றல் மோகன் பாகவத்திடம் அதிகமாக உள்ளது. எனவே, அவரையே வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்றார் அவர்.
சிவசேனை கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 18 எம்.பி.க்களும், மகாராஷ்டிர பேரவையில் 63 எம்எல்ஏ-க்களும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com