தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து அதிமுக தலைவர்கள் செயல்பட வேண்டும்

தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதிமுக தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டாக்டர் பி.வேணுகோபால் வலியுறுத்தினார்.
தில்லி தமிழ்நாடு இல்லத்தில் நாடாளுமன்ற  அதிமுக குழுத் தலைவர் பி. வேணுகோபாலை வியாழக்கிழமை சந்தித்த இஸ்ரேல்  நாட்டு தூதர் டேனியல் கார்மோன்.
தில்லி தமிழ்நாடு இல்லத்தில் நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் பி. வேணுகோபாலை வியாழக்கிழமை சந்தித்த இஸ்ரேல் நாட்டு தூதர் டேனியல் கார்மோன்.
Published on
Updated on
1 min read

தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதிமுக தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டாக்டர் பி.வேணுகோபால் வலியுறுத்தினார்.
தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பி.வேணுகோபாலை, இஸ்ரேல் நாட்டுத் தூதர் டேனியல் கார்மோன் வியாழக்கிழமை சந்தித்தார். அவருடன் அந்நாட்டு தூதரக அரசியல் விவகாரங்களுக்கான ஆலோசகர் (முதல் செயலர்) அத்வா வில்சின்ஸ்கி, அரசியல் விவகாரங்களுக்கான உதவியாளர் பிரிந்தா கேரா ஆகியோரும் வந்திருந்தனர். மூவரையும் தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர் என்.முருகானந்தம் வரவேற்றார். சுமார் 20 நிமிடங்கள் இச்சந்திப்பு நடைபெற்றது.
தென் மண்டல தூதரகம்: இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் வேணுகோபால் கூறியது: தமிழகம், புதுச்சேரி, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கான இஸ்ரேல் நாட்டுத் தூதரகத்தின் தென் மண்டல அளவிலான துணைத் தூதரகம் பெங்களூரில் அமைக்கப்பட உள்ளது. இது தொடர்பான தகவலை தமிழகத்தில் ஆளும் அரசியல் கட்சியின் தலைவர்களில் ஒருவர் என்ற முறையில் என்னிடம் இஸ்ரேல் தூதர் பகிர்ந்து கொண்டார். முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்துப் பேசுவதை பல்வேறு நாட்டு தூதரகங்களும் வழக்கமாகக் கொண்டுள்ளன.
இதைத் தொடர்ந்து, தமிழகத்துக்கு வந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்குமாறு அவருக்கு அழைப்பு விடுத்தேன். இதை ஏற்றுக் கொண்ட இஸ்ரேல் தூதர், விரைவில் தமது நாட்டு தூதரகக் குழுவுடன் வந்து தமிழக முதல்வரை சந்திப்பதாகக் கூறினார்.
விவசாயத் துறையில் சொட்டு நீர்ப் பாசன தொழில்நுட்ப உத்திகளை சிறந்த வகையில் இஸ்ரேல் நாடு பயன்படுத்தி வருகிறது. தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தளி கிராமத்தில் இதுபோன்ற தொழில்நுட்பத்தை தோட்டக்கலைத் துறை பயன்படுத்தி வருவதை இஸ்ரேல் தூதர் டேனியல் நினைவுகூர்ந்தார் என்றார் வேணுகோபால்.
அரசியல் நிலைமை: இதையடுத்து, தமிழகத்தில் ஆளும் அதிமுகவில் நிலவும் சூழல் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு வேணுகோபால் அளித்த பதில்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சித் தொண்டர்கள் யாரும் வேறு கட்சிகளுக்குச் செல்லவில்லை. அதிமுக தொடர்ந்து வலுவாகவே உள்ளது. கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பம்.
நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர், கட்சியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் போன்ற பொறுப்புகளைக் கடந்து "அதிமுகவின் தொண்டன்' என்ற முறையில் நானும் இதையே விரும்புகிறேன். தற்போது அதிமுகவின் இரு தரப்பு தலைவர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது தொண்டர்களின் உணர்வுப்பூர்வ விருப்பம். அந்த உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதிமுக தலைவர்கள் செயல்பட வேண்டும். சர்ச்சைக்குரிய வகையில் தனித்தனியாக பேட்டி அளிப்பது, கருத்து தெரிவிப்பதை கட்சித் தொண்டர்கள் விரும்பவில்லை என்றார் வேணுகோபால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com