

ரிசர்வ் வங்கி உத்தரவுக்கு எதிராக பெங்களூரில் உள்ள கன்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்த ரயில்வே ஊழியருக்கு எதிராக தமிழக பயணி பி.சண்முகம் புகார் அளித்திருக்கிறார்.
வேலூர் மாவட்டம், குருசிலாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பி.சண்முகம். இவர், பெங்களூரில் உள்ள விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். திருமணத்தில் கலந்து கொள்வதற்காக பெங்களூருக்கு வந்திருந்த சண்முகம், தனது குடும்பத்தினர் 3 பேருடன் மீண்டும் வேலூர் செல்ல பெங்களூரில் உள்ள கன்டோன்மெண்ட் ரயில் நிலையத்துக்கு ஜூன் 5-ஆம் தேதி வந்தார்.
பெங்களூரிலிருந்து ஜோலார்பேட்டைக்குச் செல்ல கட்டணமாக ரூ.35. எனவே, நான்கு பேருக்குமான மொத்த பயணக் கட்டணம் ரூ.140-ஐ பத்து ரூபாய் நாணயங்களாகத் தந்தார்.
ஆனால், பயணச்சீட்டு வழங்குநர், 4 பத்து ரூபாய் நாணயங்களை மட்டும் கொடுத்துவிட்டு மீதத் தொகையை 100-ரூபாய் நோட்டாகத் தருமாறு கூறினார்.
ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி, பத்து ரூபாய் நாணயங்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என பயணி கூறியதைப் பொருட்படுத்தாமல், அவரை தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி அதிகாரி பேசியுள்ளார்.
இதுகுறித்து கன்டோன்மெண்ட் ரயில் நிலைய பொறுப்பு அதிகாரியிடம் எழுத்துப்பூர்வமான புகாரை அளித்திருக்கிறார்.
இதுகுறித்து பி.சண்முகம் கூறுகையில், எனது ஓய்வூதியப் பணத்தை வங்கியில் பெற்றபோது 4 ஆயிரம் மதிப்புள்ள பத்து ரூபாய் நாணயங்களை அளித்திருந்தனர். இந்திய நாணய அவமதிப்புச் சட்டத்தின்படி, செல்லுபடியாகும் நாணயங்களை வாங்க மறுக்கக் கூடாது என்பதால், அந்த பத்து ரூபாய் நாணயங்களை வாங்கிக் கொண்டேன்.
அதில் இருந்து ரூ.140-க்கான பயணச்சீட்டு தொகையை 14 பத்து ரூபாய் நாணயங்களாகக் கொடுத்தேன். அதில் 4 பத்து ரூபாய் நாணயங்கள் போக, 10 பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்துவிட்டார்.
மேலும், பயணிகளிடம் தரக் குறைவாகவும் பேசினார். பத்து ரூபாய் நாணயங்களை மத்திய அரசின் ரயில்வே துறையே வாங்க மறுப்பது அதிர்ச்சியளிக்கிறது. இப் பிரச்னை கன்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் மட்டுமல்ல, ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலும் தொடர்ந்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு பல கடிதங்கள் எழுதிய பிறகும், இந்த பிரச்னை முடிவுக்கு வராமல் இருப்பதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாக வேண்டியுள்ளது. பத்து ரூபாய் நாணயங்கள் செல்லத்தக்கது என்றும், அதை வாங்க மறுக்கக் கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ள உத்தரவை யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. எனவே, இந்த விவகாரத்தை நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்துள்ளேன் என்றார்.
இந்த விவகாரம் குறித்து கருத்துக் கேட்க கன்டோன்மெண்ட் ரயில் நிலைய அதிகாரியை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொள்ள பலமுறை முயன்றும், அவரிடமிருந்து எவ்விதப் பதிலும் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.