

மத்திய அரசு ஒத்துழைத்தால் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய மாநில அரசு தயாராக உள்ளதாக, கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
கர்நாடக சட்ட மேலவையில் வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவின் கேள்விக்குப் பதிலளித்து அவர் கூறியது:
மாநிலத்தில் உள்ள வெவ்வேறு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்ய எவ்விதத் தயக்கமும் மாநில அரசிடம் இல்லை. மாநில அரசுடன் மத்திய அரசு ஒத்துழைத்தால், பயிர்க் கடனை தள்ளுபடி செய்வதில் எவ்விதப் பிரச்னையும் இல்லை.
தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்றிருக்கும் பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்ய மத்திய பாஜக அரசு மீது அழுத்தம் கொண்டு வர கர்நாடக பாஜக தலைவர்கள் முன்வர வேண்டும். ஆனால், அதுபோன்ற முயற்சிகளில் கர்நாடக பாஜக ஈடுபடவில்லை.
பாஜகவைச் சேர்ந்த எம்.பி.க்கள், விவசாயிகளின் பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் பேசியதாகத் தெரியவில்லை. விவசாயிகளின் நலனில் அக்கறை இருந்தால் மத்திய அரசு மூலம் பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்ய பாஜகவினர் அழுத்தம் தர வேண்டும்.
மத்திய அரசுக்கு மாநில அரசு வரி செலுத்தி வருகிறது. எனவே, விவசாயிகளின் பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்வதில் மாநில அரசுக்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும். பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்யக் கோருவதற்காக மத்திய அரசிடம் கர்நாடகக் குழுவை அழைத்துச் சென்றபோது, அங்கு பாஜக தலைவர்கள் யாரும் பேசவில்லை. ஆனால், பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்யுமாறு மாநில அரசுக்கு பாஜகவினர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.