ரயில்வே கொள்முதல் செலவினங்களை குறைக்கத் திட்டம்
ரயில்வே துறையின் கொள்முதல் செலவினங்களைக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. டீசல் உள்ளிட்ட அதிக செலவு ஏற்படும் பொருள்களுக்குப் பதிலாக மாற்று எரிபொருள் பயன்படுத்துவது குறித்தும் ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
இந்த நடவடிக்கைகளின் மூலம் நிகழ் நிதியாண்டில் ரூ.1,500 கோடி வரை சேமிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ரயில் பெட்டிகள் உற்பத்தி, இருப்புப் பாதைகள் மற்றும் சிக்னல்கள் பராமரிப்பு உள்ளிட்டவற்றுக்காக பல்வேறு தளவாடங்கள் ரயில்வே நிர்வாகத்தால் கொள்முதல் செய்யப்படுகின்றன.
ஆண்டுதோறும் இதற்காக ரூ.50,000 கோடி செலவிடப்படுகிறது. இந்த நிலையில், வருவாயைப் பெருக்குவதற்கும், அதேநேரத்தில் செலவினங்களைக் குறைப்பதற்கும் ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டது.
இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் குறிப்பாக கொள்முதல் நடவடிக்கைகளை மறு ஆய்வுக்குட்படுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ரயில் என்ஜினுக்குப் பயன்படுத்தப்படும் உயர் ஆற்றல் கொண்ட டீசலை கொள்முதல் செய்வதற்காக ஆண்டொன்றுக்கு ரூ.15,000 கோடி செலவாகிறது. இந்த செலவைக் குறைக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எண்ணெய் நிறுவனங்களுடன் நீண்டகால ஒப்பந்தங்கள் மேற்கொண்டு சந்தை விலையைவிடக் குறைவாக டீசல்களை வாங்குவது, மாற்று எரிபொருள் திட்டங்களை வகுப்பது உள்ளிட்டவை அவைகளில் அடங்கும்.
டீசல் மட்டுமன்றி பிற பொருள்களின் கொள்முதல் நடவடிக்கைகளிலும் இதேவழியைப் பின்பற்ற திட்டமிடப்பட்டு வருகிறது. இதன் மூலம், நிகழ் நிதியாண்டில் ரயில்வே துறையின் செலவினங்கள் ரூ.1,500 கோடி குறையக் கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
