ஜாகீர் நாயக்கின் பள்ளியில் மாணவர்களை சேர்க்க வேண்டாம்: மும்பை மாநகராட்சி

சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் சார்பில் மும்பையில் இயங்கி வரும் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு மும்பை மாநகராட்சி மறைமுகமாக தடை விதித்துள்ளது.
Published on
Updated on
1 min read

சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் சார்பில் மும்பையில் இயங்கி வரும் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு மும்பை மாநகராட்சி மறைமுகமாக தடை விதித்துள்ளது.
ஜாகீர் நாயக்கின் சார்பில் தெற்கு மும்பையில் 'இஸ்லாமிய சர்வதேசப் பள்ளி' இயங்கி வருகிறது.
இதில் கடந்த ஆண்டு நிலவரப்படி, மழலையர் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 135 ஆகும்.
இந்தப் பள்ளியின் நிர்வாகத்தை மும்பையிலுள்ள சிவாஜி நகர் சட்டப் பேரவைத் தொகுதி எம்எல்ஏ-வும், சமாஜவாதி கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவருமான அபு அஸீம் ஆஸ்மி அண்மையில் கையகப்படுத்தினார்.
இந்நிலையில், இந்தப் பள்ளியில் நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு மும்பை மாநகராட்சி தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக, பிருஹன் மும்பை மாநகராட்சியின் தெற்கு மண்டலக் கல்வி ஆய்வாளர் பி.பி.சவாண் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
கல்வி உரிமைச் சட்டம், 2009-இன் கீழ் உள்ளாட்சி மன்றத்திடமிருந்து தடையில்லா சான்றிதழைப் பெறாத எந்தவொரு பள்ளியும் செயல்படுவதற்கு அனுமதியில்லை.
எனவே, தெற்கு மும்பையில் இயங்கி வரும் 'இஸ்லாமிய சர்வதேசப் பள்ளி'யில் பெற்றோர் தங்களது பிள்ளைகளை சேர்க்க வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக அபு அஸீம் ஆஸ்மி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
இஸ்லாமிய சர்வதேசப் பள்ளியின் நிர்வாகத்தை நான் நடத்தி வரும் 'நியாஸ் சிறுபான்மைக் கல்வி மற்றும் நலச் சங்கம்' வாடகை அடிப்படையில் நடத்துவதற்கு முடிவாகியுள்ளது. கல்வித் துறையை சீற்றத்துக்கு ஆளாக்கும் வகையில் நான் எந்தச் செயலையும் செய்யவில்லை.
எனினும், இந்தப் பள்ளியின் நிர்வாகத்துக்கு தொல்லை கொடுப்பதற்காக ஏதோ சதி நடப்பதாகத் தெரிகிறது என்று அந்த அறிக்கையில் அபு அஸீம் ஆஸ்மி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com