தாமதமாக வந்ததால் அனுமதி மறுப்பு: விமான நிலையத்தில் வாக்குவாதம் செய்த எம்.பி.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் தாமதமாக வந்ததால், தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. ஜே.சி.திவாகர் ரெட்டி விமானத்தில் பயணிப்பதற்கு வியாழக்கிழமை அனுமதி மறுக்கப்பட்டது.
Published on
Updated on
1 min read

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் தாமதமாக வந்ததால், தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. ஜே.சி.திவாகர் ரெட்டி விமானத்தில் பயணிப்பதற்கு வியாழக்கிழமை அனுமதி மறுக்கப்பட்டது. அதையடுத்து, விமான நிறுவன ஊழியர்களுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜுவும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். அவரது கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஒருவரே, விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அனந்தப்பூர் மக்களவைத் தொகுதி எம்.பி.யான திவாகர் ரெட்டி, விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் இருந்து காலை 8.10 மணிக்கு இண்டிகோ விமானத்தில் ஹைதராபாத் செல்வதற்குத் திட்டமிட்டிருந்தார்.
விமானப் போக்குவரத்து விதிகளின்படி, விமானம் புறப்படுவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பாகவே, பயணிகள் செல்லும் வழி மூடப்பட்டு விடும். இந்நிலையில், கால தாமதமாக வந்த திவாகர் ரெட்டிக்கு விமான நிறுவன ஊழிர்கள் நுழைவுச் சீட்டு வழங்க மறுத்துவிட்டனர். இதனால், கோபமடைந்த அவர், அருகில் உள்ள இண்டிகோ விமான நிறுவன அலுலகத்துக்குச் சென்று, அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக, இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகளைத் தொடர்பு கொண்டபோது, ''இந்த சம்பவம் தொடர்பாக, விசாரணை நடைபெற்று வருகிறது'' என்று மட்டும் கூறினர். மேற்கொண்டு விளக்கம் தர மறுத்துவிட்டனர்.
இதேபோல், கால தாமதமாக வந்து விமானத்தைத் தவற விட்டதற்காக, கன்னாவரம் விமான நிலையத்தில் உள்ள ஏர்-இந்தியா விமான நிறுவனத்தின் அலமாரிகளை திவாகர் ரெட்டி கடந்த ஆண்டு அடித்து நொறுக்கியதாகக் கூறப்படுகிறது.
ஏர் இந்தியா விமான ஊழியரைத் தாக்கியதற்காக, சிவசேனை எம்.பி. ரவீந்திர கெய்க்வாடுக்கு விமானத்தில் பயணம் செய்வதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் தடை விதிக்கப்பட்டிருந்தது.
விமானப் பயணத்தின்போது ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் பயணிகளுக்கு 3 மாதங்கள் முதல் காலவரையின்றி தடை விதிக்கும் வரைவுக் கொள்கையை மத்திய அரசு தயாரித்துள்ளது. அந்தக் கொள்கையை, வரும் 20-ஆம் தேதி வெளியிடும் என்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com