

குர்கான்: ஜபால்புர் கிராமத்தில் உள்ள தாத்தா வீட்டுக்கு வந்த 5 வயது இரட்டைச் சகோதரிகள், பூட்டிய காருக்குள் சிக்கிக் கொண்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீரட்டில் பணியாற்றும் ராணுவ வீரரின் 5 வயது மகள்கள் ஹர்ஷா, ஹர்ஷிதா. குர்கானின் பட்டௌடி கிராமத்துக்கு அருகே உள்ள ஜபால்புர் கிராமத்தில் வசித்து வரும் தாத்தா பாட்டி வீட்டுக்கு விடுமுறையை கழிக்க வந்த இரட்டைச் சகோதரிகள், வீட்டுக்கு அருகே இருந்த காருக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை மதியம், அந்த காருக்குக் கீழே இருந்த நாய்க்குட்டிகளுடன் அவர்கள் வழக்கம் போல விளையாடிக் கொண்டிருந்தனர். அதன்பிறகு அவர்களைக் காணவில்லை. பல இடங்களிலும் உறவினர்கள் குழந்தைகளைத் தேடினர். ஆனால், இரவு 7.30 மணியளவில், காரை திறந்து பார்த்த போது, அதனுள் சிறுமிகள் மயக்கமடைந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
கார் கதவு லாக்கர் சரியாக செயல்படாததால், காரை பூட்டாமல் விட்டுவிட்டதாகவும், உள் பக்க கைப்பிடி செயல்படாததால், உள்ளே சென்ற சிறுமிகளால் கார் கதவை திறக்க முடியாமல் போயிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
மூச்சுத் திணறி இருவரும் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.