

கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) கட்சித் தலைவர் பிமல் குருங், அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் அலுவலகங்களில் போலீஸார் வியாழக்கிழமை சோதனை நடத்தினர். அப்போது, 400 ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீஸார் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, டார்ஜீலிங் மலைப் பகுதியில் காலவரம்பற்ற கடை அடைப்பு போராட்டத்துக்கு அக்கட்சி வியாழக்கிழமை அழைப்பு விடுத்தது.
இதுகுறித்து காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
பிமல் குருங்கின் சில அலுவலகங்களிலும், அக்கட்சிப் பிரமுகர்கள் சிலரின் அலுவலகங்களிலும் வெடிபொருள்கள் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்த அலுவலகங்களில் வியாழக்கிழமை சோதனை நடத்தப்பட்டது. அப்போது, வில், அம்பு, வெடிபொருள்கள், கூர்மையான ஆயுதங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக அக்கட்சியினர் சிலர் கைது செய்யப்பட்டனர்.
பிமல் குருங் இல்லத்தில் சோதனை நடத்தப்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தார். போலீஸார் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த ஜிஜேஎம் கட்சி, டார்ஜீலிங் மலைப் பகுதியில் காலவரம்பற்ற கடை அடைப்புப் போராட்டம் நடத்துவதற்கு வியாழக்கிழமை அழைப்பு விடுத்தது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலர் ரோஷன் கிரி கூறியதாவது: காலவரையற்ற கடை அடைப்புப் போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுக்க மாநில அரசுதான் எங்களை தூண்டிவிடுகிறது. எங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை மத்திய அரசிடம் கொண்டு சென்று முறையிடுவோம். கட்சிப் பிரமுகர்களின் அலுவலங்களில் போலீஸார் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட வில், அம்பு மாணவர்கள் பங்கேற்கும் வில்வித்தை போட்டிக்காக வாங்கப்பட்டிருந்தவை ஆகும். தனி மாநிலம் கேட்டு போராட்டம் நடத்துவதால் காவல் துறை எங்களுக்கு எதிராக பொய் வழக்கைப் பதிவு செய்ய முயற்சிக்கிறது என்றார் ரோஷன் கிரி.
முன்னதாக, வங்க மொழியை மாநிலம் முழுவதும் கட்டாயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜிஜேஎம், டார்ஜீலிங் மலைப்பகுதியை தனிமாநிலமாக்கக் கோரி கடந்த சில தினங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
இதுதொடர்பாக மாநில அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசு கோரியுள்ளது.
600 வீரர்கள் அனுப்பி வைப்பு: இதனிடையே, டார்ஜீலிங் மலைப்பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதற்காக மேற்கு வங்க அரசுக்கு துணை புரிய 600 துணை ராணுவத்தினரை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
முன்னதாக, டார்ஜீலிங் மலைப்பகுதியில் கோர்க்கா பிரிவினைவாதிகளுக்கும், போலீஸாருக்கு இடையே வன்முறை மூண்டது. அப்போது, போலீஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசி எறிந்து தாக்குதல் நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.