குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிடுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மறுத்துவிட்டதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாத இறுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இத்தகைய வேண்டுகோளை முன்வைத்ததாகவும் அதை பவார் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டதாகவும் தேசியவாத காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், பாஜக சார்பில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட மூத்த தலைவர்களில் ஒருவர் அப்பதவிக்கு வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம் என ஊகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால் அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே தெரிகிறது.
இந்நிலையில், பாஜகவை எதிர்கொள்ளும் வகையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை முன்னிறுத்தத் திட்டமிட்டுள்ளன. அதன்படி சோனியா காந்தியை பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக், செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக சோனியா காந்தியுடன் சரத் பவார் கடந்த மாதம் ஆலோசனை நடத்தினார். அப்போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு பவாரிடம் சோனியா வேண்டுகோள் விடுத்தார். அதற்கு மறுப்பு தெரிவித்த பவார், குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தமக்கு விருப்பமில்லை என்பதை தெளிவுபடுத்தினார் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.