டி.டி.வி. தினகரன், சுகேஷ் சந்திரசேகரின் குரல் மாதிரி பரிசோதனைக்கு அனுமதி: தில்லி நீதிமன்றம் உத்தரவு

இரட்டை இலை தேர்தல் சின்ன வழக்கு தொடர்பாக தில்லி திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா கட்சி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், சுகேஷ் சந்திரசேகர்
தில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை போலீஸாரால் ஆஜர்படுத்தப்பட்ட 'ஹவாலா' ஏஜெண்ட் லலித் குமார் என்ற பாபு பாய் (நடுவில்).
தில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை போலீஸாரால் ஆஜர்படுத்தப்பட்ட 'ஹவாலா' ஏஜெண்ட் லலித் குமார் என்ற பாபு பாய் (நடுவில்).
Published on
Updated on
2 min read

இரட்டை இலை தேர்தல் சின்ன வழக்கு தொடர்பாக தில்லி திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா கட்சி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரின் குரல் மாதிரியை சேகரித்து பரிசோதனைக்கு உள்படுத்த காவல் துறைக்கு தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்தது.
தேர்தல் சின்ன வழக்கு: 'இரட்டை இலை' தேர்தல் சின்னத்தை சசிகலா தலைமையிலான அதிமுகவுக்கு சாதகமாக பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லி காவல்துறை தொடுத்த வழக்கில் டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா ஏஜென்ட் நரேஷ் ஆகியோர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை முடிவடையாத நிலையில், டி.டி.வி.தினகரன், மல்லிகார்ஜுனா உள்ளிட்டோரின் காவல் வரும் 29-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டி.டி.வி.தினகரன் - சுகேஷ் சந்திரசேகர் - மல்லார்ஜுனா - நரேஷ் ஆகியோர் இடையே நடைபெற்றதாகக் கூறப்படும் செல்லிடப்பேசி உரையாடல் பதிவு காவல்துறைக்கு கிடைத்துள்ளது. இதன் உண்மைத்தன்மையை ஆராய சம்பந்தப்பட்டவர்களின் குரல் பதிவை சேகரித்து ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும் என்று காவல்துறை கருதுகிறது.
காவல்துறை மனு: இது தொடர்பாக தில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் கடந்த வாரம் தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'டி.டி.வி.தினகரன், சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரின் குரல் மாதிரியை சேகரித்து சிபிஐ தடயவியல் பரிசோதனை கூடத்தில் ஆய்வுக்கு உள்படுத்த அனுமதிக்க வேண்டும்' என கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்த மனு மீது சிறப்பு நீதிபதி பூணம் சௌத்ரி வியாழக்கிழமை விசாரணை நடத்தினார். அப்போது வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் இடையே நடைபெற்றதாகக் கூறப்படும் செல்லிடப்பேசி உரையாடல் பதிவு நகலை தங்களுக்கு வழங்க வேண்டும் என குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் கேட்டுக் கொண்டனர். இதற்கு காவல்துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.
இதையடுத்து சிறப்பு நீதிபதி பூணம் சௌத்ரி பிறப்பித்த உத்தரவில், 'டி.டி.வி. தினகரன், சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரின் குரல் மாதிரியை சேகரித்து அவற்றை ஆய்வுக்கு உள்படுத்த அனுமதி அளிக்கிறேன். அதே சமயம், குரல் மாதிரியை பெறும்போது குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது' என்று குறிப்பிட்டார்.
ஏஜென்ட் கைது: இதற்கிடையே, இரட்டை இலை தேர்தல் சின்ன வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரிடம் கணக்கில் வராத ரூ. 1 கோடியை வழங்கியதாக தில்லியைச் சேர்ந்த 'ஹவாலா' ஏஜென்ட் லலித் குமார் (எ) பாபு பாய் என்பவரை காவல்துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட லலித் குமாரை இரண்டு நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிபதி பூணம் சௌத்ரி அனுமதி அளித்தார்.
டி.டி.வி.தினகரனுடன் அதிமுகவினர் சந்திப்பு
தில்லி திஹார் சிறை வளாகத்தில் அதிமுக அம்மா கட்சி துணைத் தலைவர் டி.டி.வி.தினகரனை அவரது கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், முன்னாள் எம்எல்ஏ சாமி, சுப்பிரமணி ஆகியோர் புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.
திஹார் சிறை விதிகளின்படி சிறையில் உள்ள விசாரணை கைதிகளையும் பிற கைதிகளையும் சந்திக்க வரும் நபர்கள் அதற்கான விண்ணப்பத்தை சந்திப்பு நடைபெறும் நாளன்று காலை 11 மணிக்கு முன்பாக அளிக்க வேண்டும். அதை சிறையின் தலைமை இயக்குநர் பரிசீலித்து கைதிகளின் விருப்பத்தின் அடிப்படையில் பார்வையாளர்கள் சந்திக்க அனுமதி வழங்குவார்.
இந்நிலையில் மேற்கண்ட நான்கு அதிமுக பிரமுகர்களும் மாலை 4 மணிக்கு மேல் பார்வையாளர் நேரம் முடிந்த பிறகு சிறைத்துறை தலைமை இயக்குநரின் சிறப்பு அனுமதியுடன் தினகரனை சந்தித்துப் பேசியதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com