தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்குச் சொந்தமாக மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ரூ.100 கோடி மதிப்பிலான பண்ணை இல்லத்தை அமலாக்கத் துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
மல்லையா மீது கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ராய்கட் மாவட்டத்தில் கடற்கரையையொட்டி 17 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பண்ணை இல்லத்தை கடந்த ஆண்டில் அமலாக்கத் துறை முடக்கியது. பத்திரப் பதிவின்போது இந்த சொத்தின் மதிப்பு ரூ.25 கோடியாகும். ஆனால், இப்போது அதன் சந்தை மதிப்பு ரூ.100 கோடியாக உள்ளது.
முன்னதாக, அமலாக்கத்துறையின் நடவடிக்கையை எதிர்த்து அந்தப் பண்ணை இல்லத்தை நிர்வகித்து வரும் நிறுவனம் சார்பில் கருப்புப் பணத் தடுப்புச் சட்ட முறையீட்டு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், கடந்த இரு நாள்களுக்கு முன்பு அந்த மனுவை, தீர்பாப்பயம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து, பண்ணை இல்லத்தை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் ரூ.9,000 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாதது மட்டுமின்றி, பல்வேறு காசோலை மோசடி வழக்குகள், தொழில் செய்வதாக வங்கியில் கடன் பெற்று வெளிநாட்டில் சொத்து வாங்கியது, அன்னியச் செலாவணி மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மல்லையா மீது உள்ளன.
முன்னதாக, அவர் கடந்த ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி இந்தியாவில் இருந்து லண்டனுக்கு தப்பிச் சென்றார். அவரை இந்தியாவுக்குக் கொண்டுவர சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.