எதிர்க்கட்சிகள் கூட்டம்: நிதீஷ் பங்கேற்காததால் சர்ச்சை

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பிலான பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து, காங்கிரஸ் கட்சி தலைமையில் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள, ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவரும்
எதிர்க்கட்சிகள் கூட்டம்: நிதீஷ் பங்கேற்காததால் சர்ச்சை
Published on
Updated on
2 min read

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பிலான பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து, காங்கிரஸ் கட்சி தலைமையில் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள, ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவரும், பிகார் முதல்வருமான நிதீஷ் குமார் மறுப்பு தெரிவித்துள்ளது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து ஆளுங்கட்சி வட்டாரங்கள் கூறுவதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தல் பொது வேட்பாளர் குறித்து விவாதிப்பதற்கான எதிர்க்கட்சிகள் கூட்டத்தை சோனியா காந்தி வெள்ளிக்கிழமை (மே 26) நடத்துகிறார். அதில் பங்கேற்க வருமாறு, பிகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் அழைப்பு விடுத்தார்.
எனினும், நேரமின்மை காரணமாக தன்னால் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்று நிதீஷ் குமார் மறுத்துவிட்டார். மேலும், அந்தக் கூட்டத்தில் தனது பிரதிநிதி கலந்துகொள்வார் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார் கூறியதாவது:
எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு வருமாறு முதல்வர் நிதீஷ் குமாருக்கு சோனியா காந்தியின் அரசியல் செயலர் அகமது படேல் அழைப்பு விடுத்தார். ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் என்பது மட்டுமல்லாமல், பிகார் மாநிலத்தின் முதல்வராகவும் நிதீஷ் பொறுப்பு வகிப்பதால் அவருக்கு ஏராளமான பணிகள் உள்ளன. எனவே, கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பார் என்றார் நீரஜ் குமார்.
சோனியாவின் அழைப்பை நிதீஷ் ஏற்க மறுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காரணம், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும், அந்த அணிக்கு மிகப் பெரிய எதிர்க்கட்சி என்ற முறையில் காங்கிரஸ் தலைமை வகிக்க வேண்டும் என்று அண்மையில் நிதீஷ் குமார்தான் சோனியா காந்தியை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
இந்த நிலையில், இதுதொடர்பாக சோனியா காந்தி நடத்தும் கூட்டத்தை நிதீஷ் புறக்கணித்திருப்பது, பாஜகவுக்கு எதிராக, ஒரு வலிமையான கூட்டணியை எதிர்க்கட்சிகளால் உருவாக்க முடியாது என்பதையே காட்டுவதாக பாஜக வட்டாரம் நம்புகிறது.
இதுகுறித்து பாஜக எம்.பி. நந்த கிஷோர் யாதவ் கூறியதாவது:
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எந்த அளவு ஒன்றிணைய நினைக்கின்றனவோ, அந்த அளவுக்கு பிளவுதான் அதிகரிக்கிறது என்பதற்கு இது ஓர் உதாரணம். மிக அதிக பலத்துடன் விளங்கும் பாஜகவை எதிர்த்து குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்பதை நிதீஷ் குமார் நன்கு உணர்ந்துள்ளார்.
இந்த விவகாரத்தில் தலையிட்டு, தோல்வியடைந்தால் தனது பெயருக்கு இழுக்கு என்று அவர் கருதுவதால், எதிர்க்கட்சிகள் கூட்டத்தை அவர் தவிர்த்துள்ளார் என்று நந்த கிஷோர் யாதவ் தெரிவித்தார்.
இதனை முழுமையாக மறுத்துள்ள முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான சிவானந்த் திவாரி, வெள்ளிக்கிழமை கூட்டத்துக்கு நிதீஷ் வராததை பெரிதுபடுத்தத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.
முக்கியத்துவம் வாய்ந்த அந்தக் கூட்டத்துக்கு கட்சியின் பிரதிநிதியாக சரத் யாதவை அனுப்புவதன் மூலம், கட்சியின் முன்னாள் தலைவரான அவரை நிதீஷ் குமார் கெளரவித்துள்ளார் என்று சிவானந்த் திவாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com