கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது, காங்கிரஸ் - பாஜக தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவடைகிறது.
இதனிடையே, இந்த ஓராண்டு ஆட்சிக்காலத்தில் கேரளத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் கூறி திருவனந்தபுரத்தில் உள்ள மாநிலத் தலைமைச் செயலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் அறிவித்தனர்.
இதற்குப் போட்டியாக, தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை பாஜகவின் இளைஞர் அமைப்பான யுவ மோர்ச்சா அறிவித்தது.
இந்நிலையில், கேரளத் தலைமைச் செயலகத்தின் முன்பு யுவ மோர்ச்சா அமைப்பினரும், இளைஞர் காங்கிரஸ் அமைப்பினரும் புதன்கிழமை இரவு திரண்டனர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே திடீரென மோதல் வெடித்தது. இதில், இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கற்களாலும், உருட்டுக் கட்டைகளாலும் தாக்கிக் கொண்டனர்.
இதையடுத்து, அங்கு வந்த போலீஸார், இரு தரப்பினரையும் கலைந்து போகுமாறு கூறினர். ஆனால், அவர்கள் கலைந்து செல்லாததால் போலீஸார் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து இரு தரப்பினரையும் கலைத்தனர்.
இந்த மோதல் சம்பவத்தில் காயமடைந்தவர்கள், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.