சாதிக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட உத்தரப் பிரதேசத்தின் ஷபீர்பூர் கிராமத்தைத் தத்தெடுக்க, பாஜக எம்.பி. ராகவ் லக்கன்பால் சர்மா விருப்பம் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், சஹாரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷபீர்பூர் கிராமத்தில் தலித் மற்றும் தாக்குர் சமுதாயத்தைச் சேந்தவர்களுக்கிடையே அண்மையில் ஏற்பட்ட மோதலில் 3 பேர் உயிரிழந்தனர்.
இதன் காரணமாக, இந்தப் பகுதியில் இரு சமூகத்தினரிடையே பதற்றம் நிலவி வருகிறது. அங்கு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாதிரி கிராமத் திட்டத்தின் கீழ் ஷபீர்பூர் கிராமத்தைத் தத்தெடுக்க அந்தப் பகுதி பாஜக எம்.பி. ராகவ் லக்கன்பால் சர்மா விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக உரிய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, மத்திய அரசுக்கு தனது கோரிக்கையை அவர் அனுப்பி வைத்துள்ளார்.
இதுகுறித்து லக்கன்பால் சர்மா கூறியதாவது: ஷபீர்பூர் கிராமத்தை மாதிரி கிராமமாகத் தத்தெடுக்க எனக்கு அனுமதி அளிக்கப்பட்டால், அந்த கிராமத்தில் நிலவி வரும் பதற்றத்தைத் தணிப்பேன். தலித்துகள் மற்றும் தாக்குர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமன்றி, கிராமத்தில் வளர்ச்சியையும் ஏற்படுத்துவேன்.
சாலைகள், குடிநீர் விநியோகம், மின் வசதி, வடிகால் வசதி, பாசன வசதி ஆகியவை தொடர்பான அரசின் திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்துவேன் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.