

காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் தலைமையிலான குழுவினர், காஷ்மீரின் ஹுரியத் கூட்டமைப்பின் மிதவாதத் தலைவர் மீர்வாய்ஸ் உமர் ஃபரூக்கை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினர்.
ஜம்மு-காஷ்மீரில் இப்போது நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை குறித்து இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட்டது.
மணிசங்கர் ஐயர் தலைமையிலான குழுவில் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி கபில் கக், அமைதி, வளர்ச்சிக்கான மத்திய அமைப்பின் தலைவர் ஓ.பி.சர்மா, பத்திரிகையாளர் வினோத் சர்மா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இக்குழுவினர் ஜம்மு-காஷ்மீர் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளனர். அண்மைக் காலமாக பயங்கரவாதத் தாக்குதல்கள், பாதுகாப்புப் படையினர் மீது மாணவ, மாணவியர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்துவது, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி ராக்கெட் குண்டுகளை வீசுவது போன்ற சம்பவங்களால் ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. காஷ்மீரில் ராணுவம் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி ஏற்கெனவே கூறியுள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் தலைமையிலான குழு, காஷ்மீர் பிரிவினையை வலியுறுத்தும் ஹுரியத் கூட்டமைப்பின் தலைவரை சந்தித்துப் பேசியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.