

மாணவர் சங்க தேர்தலை முன்னிட்டு, தில்லி பல்கலைக்கழக சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள அனைத்து சுவரொட்டிகளையும் 24 மணி நேரத்துக்குள் அகற்ற தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சுவரொட்டி ஒட்டுவது, துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பது ஆகிய செயல்களில் ஈடுபடும் மாணவர்கள், இடைநீக்க நடவடிக்கைக்கு ஆளாவர் என்றும் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது.
மாணவர் சங்கத் தேர்தல்களின்போது, வாக்கு சேகரிப்பதற்காக துண்டு பிரசுரங்கள், அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால், தில்லி பல்கலைக்கழகத்தைப் பொருத்தவரை, ஒவ்வொரு மாணவர் சங்கத் தேர்தல்களின்போதும் காகித பயன்பாடு கட்டுப்பாடற்ற வகையில் உள்ளது.
இந்நிலையில், வரும் 12-ஆம் தேதி மாணவர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு பயிலும் மாணவர் ஒருவர் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலின்போது பிரசாரம் என்ற பெயரில் அதிக அளவிலான காகிதங்கள் வீணடிக்கப்படுகின்றன; பல்கலைக்கழக வளாகம் முழுவதும் சுவரொட்டிகளாக காட்சியளிக்கின்றன என்று குற்றம்சாட்டுள்ளது.
இந்த மனு மீது பதிலளிக்கும்படி, தில்லி பல்கலை. மாணவர் சங்கத்துக்கும், பல்கலைக்கழக மானிய குழுவுக்கும் பசுமைத் தீர்ப்பாயம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தீர்ப்பாயத் தலைவர் ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு முன் புதன்கிழமையும் விசாரணை நடைபெற்றது. அப்போது, பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு தீர்ப்பாய அமர்வு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது.
"பல்கலைக்கழக சுவர்களில் சுவரொட்டி ஓட்டினாலோ, துண்டு பிரசுரங்கள் விநியோகித்தாலோ சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்க வேண்டும். அதே தவறை மீண்டும் செய்தால், அவர்கள் மீது இடை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலை. வளாகத்திலுள்ள அனைத்து சுவரொட்டிகளையும் 24 மணி நேரத்துக்குள் அப்புறப்படுத்த வேண்டும்' என்று உத்தரவிட்ட தீர்ப்பாய அமர்வு, அடுத்தகட்ட விசாரணையை வரும் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.