கெளரி லங்கேஷ் கொலை: விசாரணையை தொடங்கியது எஸ்.ஐ.டி.

மூத்த பெண் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வுப் படையினர் வியாழக்கிழமை விசாரணையைத் தொடங்கினர்.
Updated on
1 min read



பெங்களூரு, செப்.7: மூத்த பெண் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வுப் படையினர் வியாழக்கிழமை விசாரணையைத் தொடங்கினர்.
இந்த கொலை வழக்கில் ஐஜிபி பி.கே.சிங் தலைமையில் சிறப்பு புலனாய்வுப் படையை கர்நாடக அரசு அமைத்துள்ளது. பெங்களூரு நிருபதுங்கா சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் வியாழக்கிழமை இப்படையினர் விசாரணை குறித்து ஆய்வு நடத்தினர். 
கெளரி லங்கேஷ் கொலைக்கு காரணமான கொலையாளிகளைப் பிடிக்க பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் சுனில்குமார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மூன்று தனிப் படைகளிடமும் சிறப்பு புலனாய்வுப் படையினர் பல்வேறு தகவல்களைக் கேட்டறிந்தனர். குற்றவாளிகள் குறித்து ஏதாவது துப்பு கிடைத்ததா? என்பது குறித்தும் சிறப்பு புலனாய்வுப் படையினர் விசாரித்தனர். 
கெளரி லங்கேஷின் வீட்டில் உள்ள 4 சிசிடிவி கேமராக்கள், அவரது வீட்டை சுற்றியுள்ள சுமார் 37 சிசிடிவி கேமராக்கள், அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்த வழியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களையும் சிறப்பு புலனாய்வுப் படையினர் நவீனதொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆய்வு செய்ய முற்பட்டுள்ளனர். 
போதுமான வெளிச்சம் இல்லாததால், கெளரி லங்கேஷின் வீட்டின் முகப்பில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சியில் கொலையாளிகளின் முகங்கள் தெளிவாகத் தெரியாததால், அதை அதிநவீன தொழில்நுட்பத்தின் வழியே கண்டறியும் முயற்சியும் நடந்துவருகிறது. 
இதேபோல, கெளரி லங்கேஷின் செல்லிடப்பேசிக்கு வந்த அழைப்புகள் குறித்து ஆய்வு நடத்தினர். அக்கம்பக்கத்தினர் தெரிவித்த அடையாளங்களின் அடிப்படையில் கொலையாளியின் ஓவியம் ஒன்றை தயாரிக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதேபோல, குற்றவாளிப் பட்டியலில் இடம் பெற்றிருப்போரின் புகைப்படங்கள், ஓவியத்துடன் ஒத்துப்போகிறதா? என்பதையும் ஆராய தீர்மானிக்கப்பட்டது. 
இதேபோல, ஏற்கெனவே படுகொலை செய்யப்பட்ட பகுத்தறிவாதிகளான கோவிந்த் பன்சாரே, நரேந்திரதபோல்கர், எம்.எம்.கலபுர்கி ஆகியோரின் கொலை நடந்தமுறை, சுடப்பட்ட தொலைவு, சுடுவதற்குப் பயன்படுத்திய துப்பாக்கி ஆகியவற்றையும் ஆராயுமாறு சிறப்புப் புலனாய்வுப் படை தலைவர் ஐஜிபி பி.கே.சிங் உத்தரவிட்டுள்ளார். 
கொள்கை அடிப்படையில் இந்த கொலை நடத்தப்பட்டுள்ளதா? என்ற கோணத்திலும் ஆராய சிறப்பு புலனாய்வுப் படை முடிவு செய்துள்ளது. மேலும் அடிப்படைவாதிகளின் நடமாட்டத்தை கண்காணித்து, தேவைப்பட்டால் அவர்களிடம் விசாரணை நடத்தவும் சிறப்பு புலனாய்வுப் படை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் சிசிபி டிசிபி ஜினேந்திரகனகாவி, மைசூரு காவல் அகாதெமி இயக்குநர் ஹரீஷ்பாண்டே, எஸ்பிக்களான ரவிக்குமார், சக்ரõ, ஜெகனாத்ராய், நாகராஜ் உள்ளிட்ட சிறப்பு புலனாய்வுப்படையின் 19 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதனிடையே, கெளரிலங்கேஷ் கொலை குறித்து அவரதுசகோதரி கவிதா லங்கேஷ் ராஜராஜேஸ்வரிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதன்பேரில் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com