சர்ச்சை: கல்வி உதவித்தொகையை பெறும் முடிவை கைவிட்டார் அமைச்சர் மகள்

சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து வெளிநாட்டில் படிப்பதற்கான அரசின் கல்வி உதவித்தொகை தனக்குத் தேவையில்லை என்று மகாராஷ்டிர சமூக நீதித்துறை அமைச்சர் ராஜ்குமார் படோலேவின் மகள் ஸ்ருதி
சர்ச்சை: கல்வி உதவித்தொகையை பெறும் முடிவை கைவிட்டார் அமைச்சர் மகள்
Updated on
1 min read

சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து வெளிநாட்டில் படிப்பதற்கான அரசின் கல்வி உதவித்தொகை தனக்குத் தேவையில்லை என்று மகாராஷ்டிர சமூக நீதித்துறை அமைச்சர் ராஜ்குமார் படோலேவின் மகள் ஸ்ருதி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான பாஜக கூட்டணி அரசில் சமூக நீதித்துறை அமைச்சராக ராஜ்குமார் படோலே பதவி வகித்து வருகிறார். இவரது மகளான ஸ்ருதி, சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து, பிரிட்டனின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு மகாராஷ்டிர மாநில அரசிடம் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பித்திருந்தார். 
அதை ஏற்று அவருக்கு கல்வி உதவித்தொகை அளிக்க மாநில அரசின் சமூக நீதித்துறை முன்வந்தது. இது இம்மாநில அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல், இந்த ஆண்டு கல்வி உதவித்தொகை பெறுவோர் பட்டியலில் இரண்டு அரசு அதிகாரிகளின் மகன்களின் பெயர்கள் இடம்பெற்றதும் சர்ச்சைக்கு ஆளானது. அந்த உதவித்தொகையைப் பெறுவதற்கான தகுதி அவர்களுக்கு இருந்தபோதிலும், அவர்களது சமூக அந்தஸ்து காரணமாக இது ஒரு விவகாரமாக உருவெடுத்தது.
இதையடுத்து, கல்வி உதவித்தொகை பெறுவோர் பட்டியலில் தன் மகளின் பெயர் இடம்பெற்றது குறித்து சமூக நீதித்துறை அமைச்சர் ராஜ்குமார் படோலே விளக்கமளிக்க வேண்டும் என்று முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கோரினார்.
இந்நிலையில், வெளிநாடு செல்வதற்கான கல்வி உதவித்தொகையை தாம் ஏற்கப் போவதில்லை என்று அமைச்சர் ராஜ்குமார் படோலேவின் மகள் ஸ்ருதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் நான் மேற்கொள்ள உள்ள படிப்புக்கு அங்கு எந்த உதவித்தொகையும் கிடைக்காது. எனவேதான், மாநில அரசு அளிக்கும் உதவித்தொகை கோரி நான் விண்ணப்பித்தேன். அமைச்சரின் மகளாக இருப்பது என் தவறா? 
உலக அளவிலான 200 சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பல்கலைக்கழகமும் இடம்பெறவில்லை. இந்தச் சூழலில், சிறந்த பல்கலைக்கழம் ஒன்றில் படிப்பதற்கு நான் தேர்வு செய்யப்பட்டது என் தவறா? எனினும், இந்த விவகாரத்தால் ஏற்பட்டுள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, கல்வி உதவித்தொகையை ஏற்பதில்லை என்று நான் முடிவு செய்துள்ளேன் என்றார் ஸ்ருதி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com