

கர்நாடகத்தில் பாஜகவின் போராட்டங்களை ஒடுக்க காங்கிரஸ் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக அந்த மாநில பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா குற்றஞ்சாட்டினார்.
தென் கன்னட மாவட்டம், மங்களூரில் அக் கட்சியின் இளைஞரணி சார்பில் நடைபெற்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:
கர்நாடக அரசு, பாஜக இளைஞரணி மேற்கொண்ட மோட்டார் சைக்கிள் பேரணியைத் தடுத்து நிறுத்தியுள்ளது. என்றாலும் இளைஞர்கள் பலர் சுயமாக பேரணியில் ஈடுபட்டு, மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். மாநில அரசு மட்டும் தடுக்காமல் இருந்திருந்தால் 10 ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள் பேரணியில் பங்கேற்றிருக்கும்.
ஜனநாயக நாட்டில் போராட்டங்கள் நடத்துவது வாடிக்கை. ஆனால், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அடக்குமுறையைக் கையாண்டு வருகிறது. பாஜக இளைஞரணி மாநாட்டில் 25 ஆயிரம் பேருக்கு மேல் கலந்து கொள்வார்கள் என எதிப்பார்க்கப்பட்டது. ஆனால், பாஜகவின் எழுச்சியைக் கண்டு நடுங்கிய மாநில அரசு, மாநாட்டிற்கு வந்தவர்களைத் தடுத்து கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.
தென் கன்னட மாவட்டத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளது. இதற்கு மாவட்ட பொறுப்பு அமைச்சர் ரமாநாத் ராய் பொறுப்பேற்க வேண்டும். பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தரும் மாநில அரசு, ஜனநாயக முறையில் போராடும் அரசியல் கட்சிகளை ஒடுக்க முயற்சிக்கிறது. அமைதியான முறையில் போராடுவதைத் தடுக்க மாநில அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்து வருகிறது. என்றாலும், மாநில அரசுக்கு எதிரான எங்கள் போராட்டம் ஓயாது என்றார்.
மாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், சட்டமேலவை எதிர்க்கட்சித் தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, முன்னாள் துணை முதல்வர் ஆர்.அசோக், மக்களவை உறுப்பினர்கள் பிரஹலாத் ஜோஷி, பிரதாப்சிம்ஹா, ஜோபாகரந்தலஜே, நலின்குமார் கட்டீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, மங்களூருக்கு மோட்டார் சைக்கிளில் பேரணியில் ஈடுபட முயன்ற பாஜக இளைஞர் அணியினரைத் தடுத்து நிறுத்தி போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.