Enable Javscript for better performance
அதிமுக ஆட்சியில் தான் 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

  

  அதிமுக ஆட்சியில் தான் 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 01st April 2017 12:30 PM  |   அ+அ அ-   |    |  

  stalin

  புதுதில்லி: அதிமுக ஆட்சியில் தான் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவு 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலைசெய்துகொண்டுள்ளதாக தமிழ்நாடு எதிர்கட்சி தலைவரும் திமுக செயல்தலைவருமான மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

  தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளின் குறைகளைக் கேட்காமலும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமலும் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுகிறார் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

  விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் தமிழகத்தைச் சேர்ந்த தேசிய தென்னக நதிகள் இணைப்புகள் விவசாயிகள் சங்கத்தினர் அதன் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் மார்ச் 14-ஆம் தேதி முதல் தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  இதையடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், வடமாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு விவசாயிகள் சங்கங்கள், இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்டவற்றின் தலைவர்கள் ஜந்தர் மந்தருக்கு வந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன், மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தமிழக எம்.பி.க்கள் உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், அவர்களது வேண்டுகோளுக்கு விவசாயிகள் செவிசாய்க்கவில்லை.

  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ராகுல் காந்தி, போராட்டக் குழுவினரை நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.  
  இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பகல் 10 மணியளவில் ஜந்தர் மந்தர் பகுதிக்கு சென்று விவசாயிகளை சந்தித்து பேசினார். அப்போது திருச்சி சிவா எம்.பி.. கம்யூனிஸ்டு செயலாளர் டி.ராஜா ஆகியோரும் உடன் இருந்தனர்.

  விவசாயிகளை சந்தித்த பிறகு மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  கடந்த 19 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால், மத்திய அரசும், தமிழக அரசும் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. முதல்வர் நேரில் வந்து சந்தித்து பிரச்சினையை தீர்த்து வைத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரத்தில்தான் கவனமாக இருக்கிறார்கள்.

  நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார் விவசாயிகளை சந்தித்து ஆதரவு தருவதாக சொல்லிவிட்டு திமுக மீது பழி சுமத்தி இருக்கிறார். அதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

  அதிமுக ஆட்சியில் தான் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவு 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள்.
  மேட்டூர் அணையில் இருந்து ஒருமுறை கூட ஜூன் மாதம் தண்ணீர் திறந்து விடவில்லை.

  மேலும், விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அனைத்துக் கட்சி குழுவுடன் பிரதமரை சந்திக்க வேண்டும் என்று கூறி வருகிறேன். ஆனால், அதுபற்றி தமிழக அரசு கண்டு கொள்ளாதது வேதனை அளிக்கிறது.

  வறட்சி பற்றி ஆய்வு செய்ய மத்திய குழு வந்தது. அந்த குழுவிடம் முறையான கணக்கு காட்டாமல் தேவையான நிதி பெற முடியாமல் ஆகிவிட்டது.

  1989-ல் திமுக ஆட்சியின்போது விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் கொண்டு வரப்பட்டது. 2001-ல் ஆட்சிக்கு வந்தபோது விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

  அதேபோல் 1989-இல் மத்தியில் ஆட்சியில் இருந்த வி.பி.சிங் ரூ.10 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும் ரூ.60 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டது.

  அண்மையில் நடந்த உ.பி. தேர்தலில் அந்த மாநிலத்தின் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று பிரதமர் மோடி வாக்குறுதி கொடுத்தார். அந்த மாநிலத்தின் கடன் தொகை 86 ஆயிரத்து 241 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

  தமிழக நிதி அமைச்சர் மத்திய அரசை குறை சொல்கிறார். மத்திய அரசு தமிழக அரசை குறை சொல்கிறது. இதில் எது உண்மை என்று புரியவில்லை. இதைப்பற்றி எல்லாம் பட்டிமன்றம் நடத்த விரும்பவில்லை. உடனடியாக விவசாயிகளின் பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.

  kattana sevai