சுடச்சுட

  
  sc

  அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி - பாபர் மசூதி நிலம் தொடர்பான விவகாரத்தை அவசர வழக்காக கருதி விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
  உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள இந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ஹிந்துக்களும் முஸ்லிம்களும் சொந்தம் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் இந் நிலத்தை ராமர் கோயில் இயக்கம், இஸ்லாமிய அமைப்பான சன்னி வஃபு வாரியம், ஹிந்துத் துறவிகள் அமைப்பான நிர்மோஹி அகாரா ஆகியவை சமமாக பிரித்துக் கொள்ளுமாறு அலாகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
  எனினும், இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனிடையே, சர்ச்சைக்குரிய அந்தப் பகுதியில் ராமர் கோயிலை மீண்டும் எழுப்ப விரைந்து அனுமதி வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தல் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மனு தாக்கல் செய்தார்.
  இதுதொடர்பான விசாரணை, கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, இந்த விவகாரம், உணர்வுப்பூர்வமானது என்பதால் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருமே நீதிமன்றத்துக்கு வெளியே இதுதொடர்பாக சுமுகப் பேச்சுவார்த்தை நடத்தி, சமரசத் தீர்வு காணலாம் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
  இந்நிலையில், சுப்பிரமணியன் சுவாமி தொடுத்த இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
  அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், "ராமஜென்ம பூமி தொடர்பான வழக்கில் நீங்கள் (சுப்பிரமணியன் சுவாமி) ஒரு வாதி கிடையாது என சமீபத்தில்தான் பத்திரிகை வாயிலாகத் தெரிந்து கொண்டேன். நீங்கள் ஏன் இதனை நீதிமன்றத்தில் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை?' என கேள்வியெழுப்பினார்.
  இதற்குப் பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, இந்த விஷயத்தை ஏற்கெனவே தான் தெளிவுப்படுத்தியுள்ளதாகவும, இந்த விவகாரத்தில் தனது வழிபாட்டு உரிமை பாதிக்கப்படுகிறது என்று கூறியே தான் வழக்குத் தொடுத்ததாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, இந்த மனு தொடர்பான இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், "ராமஜென்ம பூமி விவகாரம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக கருதி விசாரிக்க முடியாது' என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai