சுடச்சுட

  
  incometax

  எளியமுறையில் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வசதியாக ஒரு பக்க படிவத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  அதே நேரத்தில் வருமான வரிக் கணக்குத் தாக்கலின்போது ஆதார் எண்ணை கண்டிப்பாக குறிப்பிட வேண்டுமென்றும், ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்புக்குப் பிந்தைய 50 நாள்களில் ரூ.2 லட்சத்துக்கு மேல் வங்கியில் பணமாக டெபாசிட் செய்திருந்தால் அதனை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
  இதற்கு முன்பும் வருமான வரித் தாக்கல் படிவத்தில் ஆதார் எண் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த வாரம் மத்திய அரசு கொண்டு வந்த வருமான வரிச் சட்டத் திருத்தத்தால் ஆதார் எண்ணை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  மின்னணு முறையில்...: சனிக்கிழமை (ஏப்ரல் 1) முதல் இணையதளம் மூலம் வருமான வரித் தாக்கல் செய்யலாம். ஜூலை 31-ஆம் தேதி வரை இணையதளம் வழியான வருமான வரிக் கணக்குத் தாக்கலுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வருமான வரிக் கணக்குத் தாக்கல் நடைமுறை எளிமைப்படுத்தும் நோக்கிலும், வருமான வரி கணக்கை தாக்கல் செய்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கிலும் ஒரு பக்கம் மட்டுமே உள்ள வருமான வரி படிவம் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டில் அறிவித்தார்.
  அதன்படி, இப்போது மத்திய அரசு ஒரு பக்க வருமான வரி தாக்கல் படிவத்தை (சகஜ்) அறிமுகப்படுத்தியுள்ளது.
  பக்கம் குறைந்தது: சம்பளதாரர்கள், வீடு உள்ளிட்ட சொத்துகளில் இருந்து வருமானம் பெறுபவர்கள், வட்டி வருவாய் பெறும் தனிநபர்கள் ரூ.50 லட்சம் வரையிலான வருமானத்துக்கான ஒரு பக்க படிவத்தில் கணக்குத் தாக்கல் செய்யலாம். இதற்கு முன்பு வருமான வரி தாக்கல் செய்வதற்கு 7 பக்க படிவம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
  எளிதான நடைமுறை: இது தொடர்பாக மத்திய வருமான வரித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "2017-18-ஆம் ஆண்டுக்கான வருமான வரியைக் கணக்கைத் தாக்கல் செய்ய ஒரு பக்க படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  இது வருமான வரித்துறையில் மிகப்பெரிய புரட்சியாகும். வருமான வரிக் கணக்குத் தாக்கல் என்பது இனி மிகிவும் எளிதாக இருக்கும்' என்று கூறப்பட்டுள்ளது.
  படிவ விவரங்கள்: இந்தப் படிவத்தில் தனிப்பட்ட விவரங்கள் தவிர, சம்பளம் அல்லது ஓய்வூதியம் மூலம் கிடைக்கும் வருவாய்; வீடு உள்ளிட்ட சொத்துகள், வட்டி மூலம் கிடைக்கும் வருவாய்; வருமான வரி விலக்கு பெறுவதற்கான கோரிக்கை; இறுதியாக வரி செலுத்த வேண்டிய வருவாய் ஆகியவை இடம் பெற்றிருக்கும். அதைத் தொடர்ந்து வங்கிக் கணக்கு விவரம், முன்கூட்டியே வரி செலுத்தியிருந்தால் அது தொடர்பான விவரம் உள்ளிட்டவரை இடம்பெறும்.
  முன்பு, வருமான வரிக் கணக்குத் தாக்கலுக்காக 9 வகையிலான படிவங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது படிவங்களின் எண்ணிக்கை 7-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai