சுடச்சுட

  

  குறைந்தபட்ச இருப்புத் தொகை விவகாரம்: மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 01st April 2017 03:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காவிட்டால் அபராதம் விதிக்கும் முடிவை கைவிடுமாறு, வங்கிகளுக்கு மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கண்டிப்பான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால் வலியுறுத்தியுள்ளார். மேலும், வங்கிகளின் இந்த நடவடிக்கை, திட்டமிட்ட கொள்ளைக்கு சமம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
  மக்களவையில் வெள்ளிக்கிழமை உடனடி கேள்வி நேரத்தின்போது, இந்த விவகாரத்தை எழுப்பி கே.சி.வேணுகோபால் பேசியதாவது:
  வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காவிட்டால் அபராதம் விதிப்பது என்ற முடிவின் மூலம் கொள்ளையடிப்பதற்கான புதியதொரு வழியை, பாரத ஸ்டேட் வங்கியும், இதர வங்கிகளும் கண்டுபிடித்துள்ளன. இந்த திட்டமிட்ட கொள்ளையை, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தடுத்து நிறுத்த வேண்டும்.
  குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் முடிவை கைவிடுமாறு வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றார் அவர்.
  முன்னதாக, வங்கிக் கணக்கில் மாதாந்திர சராசரி இருப்புத் தொகையை பராமரிக்காவிட்டால் ரூ.100 வரை அபராதத்துடன் சேவை வரியும் விதிக்கப்படும் என்று பாரத ஸ்டேட் வங்கி அண்மையில் அறிவித்தது. இந்த நடைமுறை, சனிக்கிழமை முதல் (ஏப்.1) அமலுக்கு வர உள்ளது. அதன்படி, பெருநகரங்களில் மாதம் ரூ.5,000 சராசரி இருப்புத் தொகையில் 75 சதவீதத்துக்கு குறைவாக இருந்தால் ரூ.100 அபராதமும், சேவை வரியும் விதிக்கப்படும். கிராமப் புறங்கள் உள்பட அந்த வங்கிகளின் இருப்பிடங்களைப் பொருத்து அபராதத் தொகை வேறுபடும்.
  இதனிடையே, கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில் இருந்து பங்குகளை விலக்கிக் கொள்வது என்ற முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று புரட்சிகர சோஷலிஸ கட்சி எம்.பி. பிரேமச்சந்திரன் வலியுறுத்தினார்.
  இதேபோல, மத்திய அரசின் மண்வள தர அட்டை திட்டம் குறித்து விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பாஜக எம்.பி. ஹேமமாலினி கேட்டுக் கொண்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai