சுடச்சுட

  

  சகிப்பின்மைக்கு இந்தியா இடமளித்ததில்லை: பிரணாப் பெருமிதம்

  By DIN  |   Published on : 01st April 2017 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  prez

  அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் வெள்ளிக்கிழமை 'நமாமி பிரம்மபுத்ரா' (பிரம்மபுத்ரா நதியை வணங்குதல்) விழாவைத் தொடங்கி வைத்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரம்பரிய தொப்பியை அணிவித்து மரியாதை செய்

  சகிப்பின்மைக்கு இந்தியா ஒருபோதும் இடம் கொடுத்ததில்லை என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
  வேற்றுமையில் ஒற்றுமை காண்பதில் இந்தியாவை விடச் சிறந்த தேசம் உலகிலேயே எங்கும் கிடையாது என்றும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
  அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் பிரம்மபுத்திரா நதி ஆராதனை (நமாமி) விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரணாப் முகர்ஜி, நாட்டின் பன்முகத்தன்மை குறித்துப் பேசியதாவது:
  தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு (ஆசியான்) இடையே மேற்கொள்ளப்பட்டு வரும் வர்த்தக நடவடிக்கைகளிலும், முதலீடுகளிலும் இந்தியா முக்கியப் பங்காற்றி வருகிறது. ஆசியான் கூட்டமைப்புடனான நல்லுறவில் இந்தியா வெற்றிகரமாக 25 ஆண்டுகளை எட்டியுள்ளது. விரைவில் இதற்கான வெள்ளி விழாவை தேசம் கொண்டாடப் போகிறது.
  அஸ்ஸாமைப் பொருத்த வரை, அனைத்து வளங்களையும் கொண்ட சிறந்த மாநிலமாக விளங்குகிறது. வடகிழக்கு மாநிலங்களுக்கும், ஆசியான் நாடுகளுக்கும் இணைப்புப் பாலமாக அஸ்ஸாம் நீடிக்கிறது.
  மிகப்பெரிய வளர்ச்சியை அடைவதற்குத் தேவையான அனைத்து வளங்களும், திறன்களும் இங்கு நிறைந்துள்ளன. அவற்றைக் கொண்டு உள்கட்டமைப்புத் துறையில் மட்டுமன்றி பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றமடைய முடியும். நாட்டின் பொருளாதார மையமாக அஸ்ஸாம் உருவெடுப்பதற்கு இதுவே சரியான தருணம். அதற்கான நடவடிக்கைகளில் மாநில அரசும், மக்களும் ஈடுபட வேண்டும்.
  பாரத தேசத்தைப் பொருத்தவரை மொத்தம் 200 மொழிகள் பேசப்படுகின்றன. 7 மதங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். கலாசாரம், பண்பாடு, இனரீதியாக பன்முகத் தன்மை கொண்ட தேசமாக நம் நாடு விளங்குகிறது.
  இத்தனை வேறுபாடுகள் இருந்தாலும், மக்கள் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர். மொழிகள் பல பேசினாலும் தேசம் நமக்கு ஒன்றுதான். பல்வேறு இன மக்கள் இருந்தாலும், அனைவரும் சகோதர உணர்வுடன் வசித்து வருகின்றனர்.
  வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்தின் கீழ் இந்தியா இயங்கி வருகிறது. இத்தகைய பாரம்பரிய கலசாரத்தையும், பன்முகத் தன்மையையும் வேறு எந்த நாட்டிலும் காண முடியாது.
  இந்தியர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருக்கிறது என்ற கூற்றை ஏற்றுக் கொள்ள முடியும். அதேவேளையில், இந்தியர்கள் சகிப்புத்தன்மையற்றவர்கள் என்று கூறினால் அதை ஏற்க முடியாது. சகிப்பின்மைக்கு இந்த தேசம் எப்போதும் இடம் கொடுத்ததில்லை என்றார் பிரணாப் முகர்ஜி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai