சுடச்சுட

  

  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார் நீதிபதி கர்ணன்

  By DIN  |   Published on : 01st April 2017 10:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   

  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான எஸ்.கர்ணன் வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார். இதைத் தொடர்ந்து, அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய சட்ட ஆலோசனை பெற்று பதிலளிக்க நான்கு வாரங்கள் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
  பரபரப்பு புகார்கள்: சென்னை உயர் நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி, நீதிபதிகள் ஆகியோருக்கு எதிராக நீதிபதி கர்ணன் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இதைத் தொடர்ந்து நீடித்த சர்ச்சையால் அவர் சென்னையில் இருந்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதன் பிறகும் அவர் சக நீதிபதிகள் மீது மீண்டும் குற்றம்சாட்டினார்.
  இது தொடர்பாக குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோருக்கு அவர் கடிதம் எழுதினார். இதையடுத்து, இந்த விவகாரத்தை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி உச்ச நீதிமன்றம் தன்னிச்சையாக விசாரித்து வருகிறது.
  இந்நிலையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஜே.செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி.லோகுர், பினாகி சந்திரகோஸ், குரியன் ஜோசஃப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நீதிபதி கர்ணன் ஆஜரானார். இந்திய நீதித் துறை வரலாற்றில் நீதிபதியாக இருக்கும் ஒருவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராவது இதுவே முதல் முறையாகும்.
  கர்ணன் வாதம்: இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்து நீதிபதி கர்ணன் வாதிடுகையில், "எனது குற்றச்சாட்டுகளை நான் ஏன் திரும்பப் பெற வேண்டும்? தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு நீதிபதியை அவர் சார்ந்த ஜாதியின் அடையாளத்தை வைத்து "ஒரு சமூக கூட்டம்' புறக்கணிக்கிறது. எனது தரப்பு வாதத்தை கேட்காமல் என் மீதே நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனது நீதிமன்றக் கடமையை ஆற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பார்வையில் எனது மதிப்புக்கு களங்கம் கற்பிக்கப்பட்டுள்ளது' என்றார்.
  அட்டர்னி ஜெனரல் கருத்து: இதையடுத்து, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அறிவுரையின் பேரில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகி முன்வைத்த கருத்து: நீதிபதிகளுக்கு எதிராக குற்றம் சுமத்தும் நீதிபதி கர்ணன், அதற்குரிய ஆதாரத்தை அளித்திருக்க வேண்டும். ஆதாரம் இல்லாவிட்டால் தனது செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பை அவர் கோரியிருக்க வேண்டும். ஆனால், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அவர் அனுப்பிய கடிதத்தில் மன்னிப்புக் கோர நிபந்தனை விதித்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் நிபந்தனைகளின் அடிப்படையில் மன்னிப்புக் கோர இடமில்லை என்றார் முகுல் ரோத்தகி.
  இதையடுத்து, "நிபந்தனையற்ற மன்னிப்பை கர்ணன் கோரினால் இத்துடன் இந்த விவகாரம் முடித்துக் கொள்ளப்படும். தொடர்ந்து நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால் இந்த விவகாரம் விசாரணையாக மாறும்' என்று நீதிபதிகள் எச்சரித்தனர். ஆனால், நீதிபதி கர்ணன் தனது குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறப் போவதில்லை என்று உறுதிபடத் தெரிவித்தார்.
  உத்தரவு: இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நீதிபதி கர்ணனின் செயலைப் பார்க்கும் போது அவர் திடமான மனநிலையில் கருத்துத் தெரிவிக்கவில்லை என நீதிமன்றம் கருதுகிறது. எனவே, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய சட்ட ஆலோசனை பெற்று விளக்கமளிக்க நீதிபதி கர்ணனுக்கு நான்கு வாரங்கள் அவகாசம் அளிக்கிறோம். அதன் பிறகு இந்த விவகாரத்தை விசாரிக்கிறோம். அதுவரை நீதிபதி கர்ணனுக்கு எந்தவித நீதிமன்றப் பணியையும் ஒதுக்கக் கூடாது என்று ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில் எந்த மாற்றமும் செய்ய விரும்பவில்லை என்று உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

  "ஏழு நீதிபதிகள் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும்'

  தனது மனநிலை தொடர்பாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி வெளியிட்ட கருத்துக்கு நீதிமன்ற விசாரணையின் போது, நீதிபதி கர்ணன் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். அப்போது அவர், "அரசியலமைப்பு பதவி வகித்து வரும் என்னைப் பணி செய்ய விடாமல் தடுக்கும் ஏழு நீதிபதிகள் அமர்வுக்குத்தான் எந்த நீதிமன்றப் பணியையும் வழங்கக் கூடாது. அவர்களின் சம்பளத்தில் ரூ.50 ஆயிரத்தை பிடித்தம் செய்ய வேண்டும்' என்றார். இதையடுத்து, தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், "நீங்கள் நல்ல மனநிலையில் இல்லை எனக் கருதுகிறோம். உங்கள் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்யுங்கள்' என்றார். இதற்கு கர்ணன், "அதற்கான அவசியம் எனக்கு இல்லை' என்று கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai