சுடச்சுட

  
  cow

  குஜராத்தில் பசுவதையில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா அந்த மாநில சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், அந்த மாநிலத்தில் இனி பசு வதையில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
  பசு வதையில் ஈடுபடுபவர்களுக்கு நாட்டிலேயே ஆயுள் தண்டனை விதிக்கும் முதல் மாநிலம் குஜராத் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இத்தகைய கடுமையான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  கடந்த 1954-இல் இயற்றப்பட்ட குஜராத் விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தில் முதல் முறையாக 2011-ஆம் ஆண்டில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, பசு வதைக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டிருந்தது.
  தற்போது அதே சட்டத்தில் மேலும் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, பசு வதையில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்த மசோதா குஜராத் சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டு, உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
  மசோதாவை அந்த மாநில உள்துறை இணை அமைச்சர் பிரதீப் சிங் ஜடேஜா தாக்கல் செய்து பேசியபோது, "மத ரீதியில் மட்டும் பசுக்கள் முக்கியமானவை அல்ல. பொருளாதார ரீதியிலும் நமது சமூகத்தில் பசுக்கள் மிகவும் முக்கியமானவை. எனவே, பசு வதையில் ஈடுபடுபவர்களுக்கு மிகவும் கடுமையான தண்டனை விதிக்க வேண்டியது அவசியமானதாகும்' என்றார்.
  முன்னதாக, இந்த மசோதா சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டபோது காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இல்லை. பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டதால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நாள் முழுவதும் அவை நடவடிக்கையில் பங்கேற்க அவைத் தலைவர் தடை விதித்தால் அவர்கள் பங்கேற்கவில்லை.
  திருத்தப்பட்ட மசோதாவில் பசு வதை மட்டுமல்லாமல், பசுக்களை கடத்திச் செல்லுதல், மாட்டிறைச்சியை பாதுகாத்து வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மசோதா நிறைவேறிய பிறகு சமூக வலைதளமான சுட்டுரையில், "பசு வதையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா குஜராத் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது' என்று அந்த மாநில முதல்வர் விஜய் ரூபானி பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.
  சுட்டுரையில் அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், "பசுக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய முக்கியத்துவத்தை பாஜக தலைமையிலான குஜராத் மாநில அரசு புரிந்துகொண்டுள்ளது. அதன் காரணமாகவே, பசுக்களைப் பாதுகாப்பதற்கான சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்' என்று குறிப்பிட்டிருந்தார்.
  முன்னதாக, "பசுக்கள், கங்கை, பகவத் கீதை ஆகியவற்றைக் காப்பதற்கு பாஜக உறுதிபூண்டுள்ளது. பசு வதையில் ஈடுபடுவோரை தண்டிக்க கடுமையான சட்டம் கொண்டுவரப்படும்' என்று முதல்வர் விஜய் ரூபானி கடந்த மாதம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார். கடந்த 2011-ஆம் ஆண்டில் குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்துவந்தபோது, பசு வதை, பசுக் கடத்தல் ஆகியவற்றுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai